முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதீபா காவேரி ஊழியர்கள் பலியான வழக்கில் 2 பேர் கைது

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - சென்னையில் கப்பல் ஊழியர்கள் 6 பேர் பலியான வழக்கில் பிரதீபா கப்பல் கம்பெனி இயக்குநர்களான அண்ணன், தம்பியை புனேயில் போலீார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி சென்னையை நீலம் புயல் தாக்கிய போது பிரதீபா கப்பல் தரை தட்டி மெரினா கடலில் கரை ஒதுங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்து உயிர் தப்ப முயன்ற போது 6 பேர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் பலரை மீனவர்கள் கடலில் நீந்திச் சென்று காப்பாற்றினார்கள். தரை தட்டிய கப்பல் நீண்ட போராட்டத்துக்கு பின் நடுக்கடலுக்கு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டது.

6 பேர் பலியானதற்கு கப்பல் நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. கப்பல் நிறுவனம் ஊழியர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்ய தனியார் ஏஜென்சிக்கு காண்டிராக்ட் விட்டு இருந்தது. அந்த ஏஜென்சிக்கு கப்பல் நிறுவனம் பணம் பாக்கி வைத்திருந்ததால் அது உணவு சப்ளை செய்வதை நிறுத்தி விட்டது. இதனால் ஊழியர்கள் உணவு இல்லாமல் நடுக்கடலில் கப்பலிலேயே தவித்தனர். கப்பல் ஊழியர்களுக்கும் பல மாதங்களாக சம்பளம் தராமல் காலம் கடத்தி வந்தது.

மேலும் அந்த கப்பல் காலாவதியானது. லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தது என்று தெரிய வந்தது. கப்பலில் மாதக் கணக்கில் தவித்த ஊழியர்களை மீட்க கப்பல் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெடுத்து கப்பல் நிறுவனம் மீது சென்னை பெசன்ட் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கப்பலுக்கு உணவு சப்ளை செய்யும் ஏஜென்சி ஊழியர்கள் 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். கப்பல் கேப்டன் மற்றும் உயிர் தப்பிய ஊழியர்களிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தினார்கள். கப்பலில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று கூறி நிர்வாகிகள் 5 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கப்பல் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கப்பல் ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கப்பலை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கப்பல் சென்னை துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஆனால் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கவில்லை. இதனால் உயிரிழந்தவர்களில் ஒருவரான நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி, பாரதி ஆகியோர் சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள புளியமங்கலத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

மகனை கஷ்டப்பட்டு கப்பல் என்ஜினீயருக்கு படிக்க வைத்த அவர்கள் மகன் அனுப்பிய சம்பளத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கப்பல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததால் வழக்கு செலவும் ஏற்பட்டது. மகன் சம்பள பணம் கிடைக்காத நிலையில் நிவாரணமும் கைக்கு கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் நிரஞ்சனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நிவாரணம் பெற்றுத் தராததால் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் மீதும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 6 பேர் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

கப்பல் அதிபர்கள் மதன் ஆனந்த் பவார், சுரேஷ் ஆனந்த் பவார் ஆகியோர் மும்பையில் தலைமறைவாக இருந்தனர். சென்னை கோர்ட்டில் அவர்கள் முன்ஜாமீன் பெற்று இருந்தனர். அது காலாவதியாகி விட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. கப்பல் கம்பெனி இயக்குனர்களான சகோதரர்கள் மதன் பவார் (55), சுரேஷ் பவார் (51) ஆகியோரை தேடி வந்தனர். அவர்கள் புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புனேவுக்கு சென்ற போலீஸார், அண்ணன், தம்பியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரையும் போலீசார் இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர். பெசன்ட் நகர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று  ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 4 மாதங்களுக்குப் பின் கப்பல் அதிபர்கள் பிடிப்பட்டு இருப்பதால் பிரதீபா காவேரி கப்பல் வழக்கு விசாரணை மீண்டு ம் சூடு பிடித்துள்ளது.

கப்பல் நிறுவனம் தங்களது பிரதீபா காவேரி கப்பலை விற்று நிவாரணம் வழங்கலாம் என்று  கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு கப்பல் விற்கப்பட்டது. விலைக்கு வாங்கிய கப்பல் நிறுவனம் பிரதீபா கப்பலை கொண்டு சென்று விட்டது.

இதனால் அந்த கப்பல் தற்போது சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்