அமெரிக்க தீர்மானம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 7 - ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என்று கூறியுள்ளார் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே. இதுகுறித்து அவர் கூறுகையில், 

இந்தத் தீர்மானத்தில் இலங்கை குறித்து என்ன விவரங்கள் கூறப்பட்டுள்ளன என்பது எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவ்வாறு தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படுவதாக இருந்தால், அந்தத் தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்த பிறகே எங்கள் நிலையை தெளிவாக்க முடியும். இதுகுறித்து சர்வதேச சமூகத்திடம் தெளிவுபடுத்தி வருகிறோம். மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நாட்டின் சார்பில் யார் பங்கேற்பது என்பது குறித்து சர்ச்சை எதுவும் நிலவியதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எனினும், சென்ற வார இறுதியிலேயே நான் பங்கேற்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.


தற்போது மனித உரிமை அமைச்சகம் என்பது இல்லை, நானும் பெருந் தோட்டத்துறை அமைச்சராகவே இங்கே செயல்பட்டு வருகிறேன். மனித உரிமை விவகார அமைச்சகத்தை இல்லாமல் செய்து விட்டதால், நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அதிபரின் மனித உரிமை விவகார சிறப்புப் பிரதிநிதியாக என்னை நியமித்துள்ளார்கள். இருந்தாலும், மனித உரிமை தொடர்பான பொறுப்புக்கள் குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நான் கலந்து கொள்வதா இல்லையா என்பதனை இப்போது என்னால் தீர்மானிக்க முடியாது. மேலிட உத்தரவின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: