இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரிக்கை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.8 - இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் நேற்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தின. 

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோது அதிபர் ராஜபக்சேயின் உத்தரவுப்படி சிங்கள ராணுவத்தினர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்தது. மேலும் ஏராளமான தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது. இதனையொட்டி இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் எஙூஙூன்று கூறப்படுகிறது. அதனால் அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதனையொட்டி லோக்சபையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தை முடித்துவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதில் உறுப்பினர்கள் கவலையில் மத்திய அரசும் பங்கு கொள்கிறது. அதேசமயத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்த பின்னர்தான் ஆதரிப்பதா? அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் சமாதானத்துடன் வாழ வேண்டும். இலங்கையில் அரசியல் ரீதியான பிரச்சினைக்கும் விரைவில் தீர்வுகாண வேண்டும். இலங்கையில் தமிழர்கள் கெளரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பமாகும் என்றார்.  


முன்னதாக இடதுசாரி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை பிரச்சினையை எழுப்பினர். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ராஜ்யசபையில் வலது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும் சிங்கள ராணுவத்தினர், தமிழர்களுக்கு எதிராக இழைத்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாரபட்சமற்ற முறையில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கையை மத்திய அரசு கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பாராளுமன்ற இருசபைகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை எழுப்பி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: