முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் - சந்தமாமா

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8  - நாயகன் கருணாஸ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று சொந்த கிராமத்தை விட்டு பட்டணம் வருகிறார். ஆனால், அவர் எண்ணியபடி எழுத்தாளர் ஆவதில் சிக்கல்கள் உருவாகிறது. அப்போது இளம் வயதும், அழகும் கொண்ட நாயகி ஸ்வேதா பாஸ் இவர் பார்வையில் படுகிறார். இருவரும் பழகுகிறார்கள். கருணாஷின் வெள்ளந்தியான மனசு ஸ்வேதாவிற்கு பிடித்து விடுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

இந்த சூழலில் இன்னொரு நாயகன் ஹரீஸ் கல்யாண் பார்வையில் ஸ்வேதா படுகிறார். ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்த விபரம் தெரியாமல் ஹரீஸ் ஒருதலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் கருணாஷுக்கு தெரிகிறது. ஏற்கனவே எழுத்தாளர் ஜெ.கந்தன் (ஜி.எம்.குமார்) மனதில் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுத வேண்டும். அப்போதுதான் படைப்புகள் வலிமையானதாக இருக்கும். மக்கள் பாராட்டுவார்கள் என்று கருணாஸுக்கு ஆலோசனை கூறுகிறார். இதை நினைவில் கொண்டு தன் மனைவியிடம், நீயும் அந்த பையனை காதலிப்பது போல காதலி. அவன் எங்கெல்லாம் வர சொல்கிறானோ, அங்கெல்லாம் செல். இந்த சம்பவங்களை மையப்படுத்தி நான் கதை எழுதி பிரபலமாகி விடுவேன் என்கிறார் கருணாஷ்.

இதற்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தாலும், கணவரின் வளர்ச்சிக்காக ஹரீசை காதலிக்க சம்மதிக்கிறார் ஸ்வேதா. கதை உருவாகிறது. பிரபலமான பத்திரிகையில் கதை பிரசுரமாகி நினைத்தது போல பெரிய எழுத்தாளர் ஆகிறார் சந்தமாமா (கருணாஸ்). ஆனால் ஸ்வேதா- ஹரீஸ் காதல் நிறைவேறியதா? இல்லை கணவர் கருணாசை விட்டு ஸ்வேதா பிரிந்தாரா என்பது கிளைமாக்ஸ். 

அம்பாசமுத்திரம் அம்பாணி படத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம், நடிப்புக்கு தனி இடம் கொடுத்து கருணாஸ் நடித்திருக்கிறார். கிராமத்திலிருந்து மகன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவாக வரும் இளவரசு பணம் கொடுப்பதும், அதற்கான காரணத்தை ஸ்வேதாவிடம் சொல்லும்போது நெகிழ்ச்சி. அப்பா கொடுத்த பணத்தை வைத்து புக் எழுதி அது விற்பதற்காக கருணாஸ் எடுக்கும் அதிரடி தள்ளுபடி, கொட்டாச்சியை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை. தன் மனைவியை இன்னொருவன் காதலிக்கும்போது, அவளுக்கு உண்மையாகவே ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து, மறைந்து மனம் நொந்து காதல் காட்சிகளை கருணாஸ் பார்க்கும்போது, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படி படம் முழுக்க கருணாஸ் நடிப்பில் கவனம் செலுத்தியிருப்பது நன்றாக உள்ளது. 

நாயகி ஸ்வேதா பாஸ் இளமை, அழகு, பதுமையாக படம் முழுக்க வருகிறார். கொடுத்த பாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் அவ்வப்போது கருணாஸுக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டுவது அருமை. இவர்களுடன் ஜி.எம்.குமார், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாண் கொட்டாச்சி சுஜாதா என பலரும் குறை சொல்ல இடம் வைக்காமல் நடித்துள்ளனர். 

ஆனந்தகுட்டன் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்களுக்கு இதமாக உள்ளது. வைரமுத்து வரிகளில் கூடங்குளம் அணுஉலை பாடல் மீண்டும் சேர்க்க தூண்டும் ரகம் காட்சிபடுத்திருப்பதும் அருமை. அதே போல நாராயணாநாராயணா பாடல் கருத்து செறிவு உள்ள பாடல். சமூக பார்வை மற்ற பாடல்கள் கமர்ஷியல் அம்சத்தை நிறைவு செய்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த்தேவா சூப்பர். ராம்நாத் வசனம் நச். இழுவை இல்லை.

எடிட்டிங் முரளி கோர்வை. கிளாசிக் சினிமாஸ் சார்பாக இணை தயாரிப்பு கே.உன்னிகிருஷ்ணன். தயாரிப்பு டி.வி.முரளி, கதை, திரைக்கதை, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன், வெளியீடு கென் மீடியா. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் சந்தமாமா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்