முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ காப்பீட்டு: மறு வாழ்வு கிடைத்ததாக வாலிபர் கண்ணீர்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 - ஒரு பைசா கூட செலவில்லாமல் கழுத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு வாலிபர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் முதல்வரை பாராட்டியுள்ளார். முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் தனக்கு மறு வாழ்வு கிடைத்ததாக வாலிபர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

உலகில் எவருக்கும் வந்திடாத கழுத்து புற்று நோய் கட்டியை தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில்  செட்டி நாடு மருத்துவமனை மருத்துவர்கள் வாலிபருக்கு  ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, அம்மருத் துவமனையின் தலைமை செயல் அதிகாரி  வெங்கட பனிதர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள்  வி.ஜி.ரமேஷ், கார்த்திகேயன், மருத்துவர்கள் கோபால கிருஷ்ணன், அருண் தியாகராஜன், அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த, 24 வயது வாலிபர் கார்த்திக்  எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவரது கழுத்தின் இடது புறத்தில் கட்டி ஒன்று இருந்தது. இந்த கட்டி எதனால் வந்தது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.அது, முதுகு தண்டுவடம், நரம்பின் உட்பகுதியில் வரக்கூடிய புற்று நோய் கட்டி என்பது தெரியவந்தது. இது போன்ற  புற்று நோய் கட்டி,  கழுத்துப்பகுதியில், உலகத்தில்  வேறு எவருக்கும் வந்தது இல்லை என்பதையும்  அறிந்தோம்.

இந்த வாலிபருக்கு இரண்டு கட்டமாக அறுவை சிகிச்சை செய்தோம். முதலில், முதுகு தண்டுவடத்தை அழுத்தம் செய்து, அதனால், உடல் முழுவதும் மரத்துப்போகச் செய்திருந்த நிலையை மாற்றினோம். அதன் பின்னர், கழுத்துப்பகுதியில் உணவு, மூச்சுக்குழாய், மூளைக்குப் போகும் ரத்தக்குழாய்களை ஆக்கிரமித்து இருந்த கட்டி அகற்றப்பட்டது. அந்த வாலிபருக்கு, அறுவை சிகிச்சை ஏழு மணி நேரம் நடந்தது. தொடர் சிகிச்சையாக ரேடியோ தெரபி தரப்படுகிறது.

தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை நடந்ததால், வாலிபரின் குடும்பத்தாருக்கு எவ்வித பண செலவுகளும் ஏற்படவில்லை.  எங்கள் மருத்துவமனையில் உள்ள அதி நவீன தொழில் நுட்ப கருவிகள்  இருந்ததால், சவால் நிறைந்த புற்று நோய் கட்டி அகற்றப்பட்டு, அந்த வாலிபரின் உயிரை காப்பாற்ற முடிந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தால் பயனடைந்த வாலிபர் கார்த்திக் கூறியதாவது: எனது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். எனக்கு வந்திருப்பது புற்று நோய் கட்டி என்பதை மருத்துவர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சியடைந்தோம். உலகத்தில் இதுபோன்றதொரு கட்டி யாருக்கும் வந்தது இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அதனால், இனி உயிர்பிழைக்க மாட்டேன் என்று தான் நினைத்தேன். ஆனால், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தால், ஒரு பைசா கூட செலவு இல்லாமல், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து மறு வாழ்வு பெற்றுள்ளேன். இதற்கெல்லாம் காரணமாக இருந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மருத்துவர்களுக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கார்த்திக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்