முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனிபெண் பலாத்கார வழக்கின் குற்றவாளி டிபேஸ்புக் உதவியால் சிக்கினான்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், மார்ச் - 11 - ஒடிஷாவில் ஜெர்மனி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி தலைமறைவான குற்றவாளி ஒருவரை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் டிபேஸ்புக் மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒடிசா மாநில ஊர்காவல்படை டிஜிபியாக இருந்தவர் பூஷன் மொகந்தி. இவரது மகன்தான் பிட்டி மொகந்தி . கடந்த 2006ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாருக்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணை பிட்டி மொகந்தி ஒரு ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார். அந்த ஜெர்மனி பெண்ணின் புகாரின்பேரில் ராஜஸ்தான் போலீசார் பிட்டி மொகந்தியை கைது செய்தனர். ஒரு மாதத்தில் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் சிறையில் பிட்டி மொகந்தி அடைக்கப்பட்டார். 8 மாதங்கள் உள்ளே இருந்த பிறகு, 2006 நவம்பரில் ஒடிசாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாயை பார்ப்பதற்காக ஒரு வாரம் பரோலில் பிட்டி மொகந்தி வெளியே வந்தார். இதன் பிறகு பிட்டி தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து மகனை தப்ப வைத்ததாக கூறி பூஷன் மொகந்தியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தலைமறைவான பிட்டி மொகந்தி கடந்த 6 வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்தியாவில் இதற்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய பலாத்கார வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் குறித்து பல பத்திரிகைகளிலும், டிவிக்களிலும் செய்திகள் வெளியாயின. மேலும் யூ டியூப், பேஸ்புக் உட்பட சமூக இணைய தளங்களிலும் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் குறித்து செய்திகள் அதிகம் வெளியாயின. இதில் அல்வாரில் ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிட்டி மொகந்தி குறிந்த செய்தியும் படமும் பேஸ்புக் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை கண்ணூர் மாவட்டம் பழயங்காடியை சேர்ந்த ஒருவர் தற்செயலாக பார்த்தார். பிட்டி மொகந்தியின் படத்தை பார்த்த அவருக்கு பழயங்காடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளையில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் முகச்சாயல் போல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த நபர் இதை உறுதிப் படுத்த மறுநாள் வங்கிக்கு சென்று பார்த்த போது பேஸ்புக்கில் பார்த்த படமும், வங்கியில் பணியாற்றிய அதிகாரியின் உருவமும் ஒரே மாதிரி இருந்தது. இதையடுத்து அவர், வங்கியில் உள்ள மற்ற ஊழியர்களிடம் அந்த அதிகாரி குறித்து விசாரித்தார். அப்போது அவரது பெயர் ராகவ ராஜா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியை சேர்ந்தவர் என்று கூறினர். ஆனாலும் அந்த நபருக்கு சந்தேகம் தீரவில்லை. இது குறித்து வங்கியின் மேலாளரிடம் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரை வங்கி மேலாளர் வாங்கி பொறுப்பாக போலீசாருக்கு அனுப்பினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த வங்கி அதிகாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் பிட்டி மொகந்திதான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.உடனே அவரை போலீசார் கைது செய்தனர். போலி ஆவணங்கள் தயாரித்த பிட்டி பிட்டி மொகந்தி, ராகவ ராஜா என்ற பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து கண்ணூர் மாவட்டம் பழயங்காடி ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கி கிளையில் பயிற்சி அதிகாரியாக சேர்ந்துள்ளார். பரோலில் வெளியே வந்ததும் நேரடியாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திக்கு சென்ற அவர் தனது பெயரை ராகவ ராஜா என மாற்றி உள்ளார். அங்கேயே 3 ஆண்டுகள் தங்கி இருந்த அவர், பின்னர் கேரளா மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். பிட்டி மொகந்தி எப்போதுமே ஒரு இடத்தில் சில மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார். அடிக்கடி லாட்ஜ்களை மாற்றிவிடுவார். கண்ணூர் மாவட்டத்தில் பையனுனூர், பழயங்காடி, தளிபரம்பு ஆகிய இடங்களில் ஏராளமான லாட்ஜ்களில் மாறி மாறி வசித்து வந்துள்ளார். மேலும் இவரது வங்கி கணக்குக்கு அவரது தந்தை பூஷன் மொகந்தி பலமுறை லட்சக்கணக்கில் பணம் அனுப்பி வைத்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிட்டி மொகந்தியிடம் இருந்த 3 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைதான பிட்டி மொகந்தி பையனுனூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பிட்டி மொகந்தியை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு வங்கி பணியாற்றியதும், இப்போது, டிபேஸ்புக் உதவியால் சிக்கிக் கொண்டதும் கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்