முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி, மார்ச்  - 11 - திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் முக்கியமான கோவில் ஆகும். இந்த கோவிலில் இருக்கும் அம்மனிடம்  வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.  அதனால் சமயபுரம் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து  அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். திருவிழா நாட்களில் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.  அதன்படி நேற்று காலை பூச்சொரிதல் விழா தொடங்கியது.  விழாவையொட்டி நேற்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக  வாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. காலை 8.30 மணிக்கு மேஷ லக்னத்தில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள் பூக்களை தட்டுகள், கூடைகளில் ஏந்திக் கொண்டு யானை புடைசூழ மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலைச் சுற்றி வலம் வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.  இந்த பூச்சொரிதல் தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற பூச்சொரிதல் ஆகும்.  பின்னர் காப்பு கட்டி, பாவாடை சாற்றுதல் நடைபெற்றது. தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற புஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து கூடை, கூடையாக பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.  இதுதொடர்ந்து இடைவிடாமல் தொடர்ச்சயாக இரவு முழுவதும் நடந்து இன்று காலை வரை நடக்க இருக்கிறது. இந்த பூச்சொரிதல் விழாவையட்டி பக்தர்களுக்கு நோய் நொடியோ, தீய வினைகளோ ஏற்படாமல் இருக்கவும்,  அனைத்து  செல்வங்களும் கிடைக்கவும் அம்மன் பச்சை பட்டினி விரதத்தை தொடங்குவதாக ஐதீகம். அந்த விரதத்தை அம்மன் நேற்று காலை தொடங்கினார்.  அம்மனின் ஆண் பக்தர்களும், பெண் பக்தர்களும் மஞ்சள் ஆடை உடுத்தி பச்சைப்பட்டினி விரதத்தை தொடங்கினார்கள்.  இந்த விரதம் 28 நாட்கள் நடக்கிறது. விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான நைவேத்தியம் இல்லாமல் நீர்-மோர், பானகம், துள்ளுமாவு, இளநீர், கரும்பு சாறு போன்றவை படைக்கப்படுகிறது. 

அதேபோல பச்சை பட்டினி விரதம் இருக்கும் பக்தர்களும் விரத உணவை உட்கொள்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த முதல் வார பூச்சொரிதலை தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் 2, 3, 4-வது  வார பூச்சொரிதல் விழாக்கள் நடைபெறுகின்றன.  சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தேரோட்ட கொடியேற்றத்துக்கு முந்தைய வார ஞாயிறு வரை இந்த விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) தென்னரசு, மேலாளர் நல்லசெல்லி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்