முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெசோஅமைப்பு வேலை நிறுத்தத்தில் கடையடைப்பு செய்ய வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது:

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 11 - டெசோ அமைப்பு வேலை நிறுத்தத்தில் கடையடைப்பு செய்ய வணிகர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று த.வெள்ளையன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-​ இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைகோரி, மார்ச் 12-​ம் தேதி டெசோ சார்பில் நடத்த இருக்கும் பொது வேலை நிறுத்தம் குறித்து எங்கள் அமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டியது அவசியமென்று கருதுகிறோம். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து 2009-​ல் தமிழ்நாட்டில் முதல் கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது எங்கள் பேரவை என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அப்போது எங்களைக் கைது செய்து, எங்கள் போராட்டத்தை அப்போதிருந்த தி.மு.க. அரசு எப்படியெல்லாம் நசுக்க முயன்றது என்பதை நாடு அறியும். ஈழத்தில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல் தமிழகமெங்கும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி, எங்கள் உணர்வை வெளிப்படுத்தினோம். இந்த நிலையில் டெசோ அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிற பொது வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக நடத்தப்படுவதாய் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முழு மனதாக ஆதரிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே மத்திய அரசில் அவரது கட்சி அமைச்சர்கள் இருப்பதும் அந்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழ்நாட்டில் அவர்களே போராட்டம் நடத்துவதும் வணிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழகமெங்கும் அநேக அரசியல் கட்சியினர் கடையடைப்பில் பங்கேற்கிறீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் சொல்கின்ற பதில்​ வணிகர்கள் எடை போட தெரிந்தவர்கள் என்பதுதான். இலங்கையில் நடந்தது போர் அல்ல. இனப்படுகொலை என்பதையும், இனப்படுக்கொலைக்காக இலங்கை மீது சர்வதேச சுதந்திர விசாரணை தேவை என்றும், ராஜபக்சேவை நமது சகோதரர்களை இனப்படுகொலை செய்ததற்காக குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை எங்கள் பேரவையும் வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியாவே கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருப்பதை நாங்கள் வழிமொழிகிறோம். டெசோ அமைப்பும் இந்தக் கருத்தை வழிமொழிய வேண்டும்.மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அந்த அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியான வழிகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு, கடையடைப்பு செய்ய வேண்டும் என்று வணிகர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு த.வெள்ளையன் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்