முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூம்புகாரில் 78.50 கோடியில் மீன் பிடி துறைமுகம்: முதல்வர்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - மீனவர்கள் ஆழ்கடலில் தொழில் செய்ய வசதியாக நாகை மாவட்டம், பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ரூ.78.50 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அப்பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.6.67 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-   

மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மீனவர்களுக்கு உற்ற பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

மீன்வளத்தை மேம்படுத்தவும், மீன்வளத்தைப் பெருக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும், மீன்வளக் கல்வியை ஊக்குவிப்பது மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் தாலுக்காவில பனங்குடி மற்றும் நாகூர் முட்டம் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மீனவளப் பல்கலைக் கழகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா   ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை தமிழகத்தில் 11 இடங்களில் 37 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும், சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கு ஏற்றவாறு ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்தளம், உட்புற சாலை வசதி, தெரு விளக்கு வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்களை 63 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம் 13 மீன்பிடி நகரங்களின் மீன் பதப்படுத்தும் பூங்காக்களை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்து, அதன் அடிப்படையில் முன் மாதிரியாக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயன்பெறும் வகையில், கடலூர் மாவட்டம் பெரிய கங்கணாங்குப்பம் கிராமத்தில் 1.94 ஏக்கர் நிலப்பரப்பில் 14 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிராமத்தில் 2.19 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 23 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், என இரண்டு மீன் பதனிடும் பூங்காக்களை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஆழ்கடல் மின்பிடித் தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும் வசதி போதுமானதாக இல்லாததும், பதப்படுத்துதல், சேமிப்பு சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடையாக உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  நாகப்பட்டினம், பழையாறு, பூம்புகார், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், மீன்பிடித் தொழில் அதிக அளவில் நடைபெறும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியினை விரைவாக தொடங்கிடும் வகையில் முதற்கட்டமாக 6 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மீனவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்