முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலைப்பின்னல் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், காவல் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் திருவள்ளூர், சிவகங்கை, கோயம்புத்தூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டத்தினை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, குற்றவாளிகளை கண்டறிந்து, குற்றங்களை தடுத்து, நாட்டில் பொது அமைதியை பேணிக் காக்கும் மகத்தான பணியினை காவல் துறை ஆற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையின் பணியினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

அந்த வகையில், காவல் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டம் 113 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள 1482 காவல் நிலையங்கள், 479 மேனிலை அலுவலகங்கள் மற்றும் 938 சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 2899 மையங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒருங்கிணைக்கப்படும்.

இத்திட்டத்திற்கென தனித்தன்மை வாய்ந்த பொது ஒருங்கிணைந்த காவல் பதிவுருக்கள் புதுப்பிக்கும் முறைமை என்ற உள்ளக பயன்பாட்டு மென்பொருள் தேசிய  தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மேற்கண்ட நான்கு மாவட்டங்களின் 110 காவல் நிலையங்களிலும் நிறுவப்பட்டு 45 காவல் மேனிலை அலுவலகங்களுடன் வலைதளம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும், முதல் தகவலறிக்கை மற்றும் வழக்கு விவரங்கள் கணினி மூலமாக பதிவு செய்யப்பட்டு மாநில தகவல் சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கென, மின்னணு வாயிலாக புகார் அளித்தல், உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் ஆகிய சேவை வசதிகள் ஏற்படுத்தப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த திட்டத்தை மாநிலத்தில் குறைந்தது இரண்டு மாவட்டங்களில் செயலாக்கம் செய்ய கேட்டுக்  கொண்டது. ஆனால், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் மாநகரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதற்கட்டமாக குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டத்தினை தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர், காவல் துறை தலைமை இயக்குனர், காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் (மாநில குற்ற ஆவணக் கூடம்), தேசிய தகவல் மைய துணை தலைமை இயக்குனர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்