முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் பாக். தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.15 - ஸ்ரீநகரில் நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சூசகமாக தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள மத்திய பாதுகாப்பு படையின் முகாமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள ஊரை சேர்ந்த பெருமாள் என்பவர் உள்பட 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 2 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். வீரர் பெருமாள் உடல் ஸ்ரீநகரில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஸ்ரீநகரில் ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது என்று அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சூசகமாக தெரிவித்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரைகள் இருந்தன என்று ஸ்ரீநகரில் நடந்த தாக்குதல் குறித்து பாராளுமன்ற இருசபைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே விளக்கம் அளிக்கையில் தெரிவித்தார். ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினர். நாட்டில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களையும் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளையும் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. இதனால் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று உறுப்பினர்கள் கூறிய பின்னர் அமைச்சர் ஷிண்டே இந்த விளக்கத்தை அளித்தார். தாக்குதலின்போது சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றார். ராஜ்யசபையில் இந்த பிரச்சினையை உறுப்பினர்கள் எழுப்பி, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களா என்று கூறும்படி அமைச்சர் ஷிண்டேவை வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஷிண்டே, அந்த 2 தீவிரவாதிகளும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்தான் என்று கூறினேன். பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று நான் கூறவில்லை என்றார். சுட்டுக்கொல்லப்பட்ட அந்த 2 தீவிரவாதிகளிடமிருந்து 2 டைரிகள் எடுக்கப்பட்டது. அவைகளில் இருந்த நம்பர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் தோல் மருந்து டியூப் ஒன்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இந்த தோல் மருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் உள்ள ஒரு கம்பெனியில் தயாரிக்கப்பட்டுள்ளது. டியூப்பில் உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது என்றும் ஷிண்டே தெரிவித்தார்.  நாட்டில் தீவிரவாதத்தை மத்திய அரசு கடுமையாகவும் துணிச்சலாகவும் எதிர்த்து போராடி வருகிறது. இந்த விஷயத்தில் யாரும் கைகளில் வளையல்களை அணியவில்லை. எல்லோரும் உறுதியாகவும் துணிச்சலாகவும் இருக்கிறோம். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று ஷிண்டே ஆவேசத்துடன் கூறினார். மும்பையை தாக்கிய அஜ்மல் கசாப் மற்றும் பாராளுமன்ற தாக்குதலில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்னர் இந்த மாதிரி தாக்குதலில் தீவிரவாதிகள் எடுபடலாம் என்று மத்திய அரசு கருதியது. அதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஷிண்டே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்