முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - மின்சாரம் தாக்கிப் பலியான மின்துறை ஊழியர்கள் 3 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மின்சார வாரிய ஆவடி பிரிவில் மஸ்தூராக பணிபுரிந்து வந்த பூந்தமல்லி வட்டம் கொடுங்கையூரைச் சேர்ந்த கண்ணன், 1.3.13 அன்று ஆவடி முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள மின் மாற்றியில் மின்சாரம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தமிழ்நாடு மின்சார வாரிய கிளியனூர் பிரிவில் கள உதவியாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன் 5.3.13 அன்று கிளியனூர் மின்மாற்றியில் மின்சாரம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு மின்சார வாரிய ஆம்பூர் நகர பிரிவில் மஸ்தூராக பணிபுரிந்து வந்த சுகுமார், 6.3.13 அன்று நேதாஜி மின்பகிர்மான மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழ்நாடு மின்சார வாரிய கள உதவியாளர் கஜேந்திரன், மஸ்தூர் பணியாளர்கள் கண்ணன் மற்றும் சுகுமார் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தமிழ்நாடு மின்சார வாரிய கிளியனூர் பிரிவில் கிளியனூர் பிரிவில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன் 5.3.13 அன்று கிளியனூர் மின்மாற்றியில் மின்சாரம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார் என்பதையும் அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்மாற்றியில் மின்சாரம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி காலமான தமிழ்நாடு மின்சார வாரிய கள பணியாளர் கஜேந்திரன், மஸ்தூர் பணியாளர்கள் கண்ணன் மற்றும் சுகுமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம்  ரூபாயும், மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த கம்பியாளர் ராமகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்