முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி நிவாரண வீடுகளை சீரமைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - நாகப்பட்டினம் உள்பட 5 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்டிய சுனாமி நிவாரண குடியிருப்புகளைச் சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா ரூ.19 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக்காலத்தில், 2004-ம் ஆண்டு தமிழகத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சுனாமியின் போது, மக்களின் துயர்துடைக்க உதவித் தொகை, வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டுதல், வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு, அவர்களின் மீன்பிடித் தொழிலை தொடங்குவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குதல் போன்ற எண்ணற்ற நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வாழ்வினை அளித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு, வீடு இழந்த மக்களுக்கு அரசு மட்டுமின்றி, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இதில் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கூரைத்தள ஓடுகள் பதிக்கப்படாததால், மேல் கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு, அதில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, வீடுகள் தன்னார்வ தொண்டு நிறுவங்களால் கட்டப்பட்டிருந்தாலும், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த வீடுகளின கான்கீரிட் கூரைகளின் மீது சுருக்கியுடன் கூடிய கூரைத்தள ஓடுகள் பதித்து, நீர்க்கசிவினை தடுப்பதற்காக 19.25 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் 7,513 வீடுகளுக்கு ரூ. 12.02 கோடியும், கடலூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 1,203 வீடுகளுக்கு ரூ. 1.92 கோடியும், தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் 233 வீடுகளுக்கு  37 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 2,518 வீடுகளுக்கு 4 கோடியே 3 லட்சம் ரூபாயும், திருநெல்வேலி மாவட்ட ஊரகப் பகுதிகளில் 568 வீடுகளுக்கு 91 லட்சம் ரூபாயும் என மொத்தம் 19.25 கோடி ரூபாய் செலவில் இந்த 5 மாவட்டங்களில் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களால்  கட்டப்பட்ட 12,035 வீடுகளைப் பழுதுபார்க்க தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்