முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை - தாய்மார்கள் சத்துமாவுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு வழங்க நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய ரூ.190 கோடியுடன் மேலும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஙீஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர். சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எவ்வித இடர்பாடுமின்றி பெற்று மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும் வலிமையான தலைமுறையினராக உருவாக இயலும்.

எனவே, தமிழகத்திலுள்ள 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை, அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஊட்டசத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்த எளிதில் செரிமானம் ஆகக்கூடிய தன்மை உள்ள உயிர்சத்துக்கள் நிறைந்த கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, தூளாக்கப்பட்ட வெல்லம், கடலை பருப்பு மற்றும் வைட்டமின் கலவை கலந்த சத்து மாவை இணை உணவாக 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்க்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சத்து மாவை இணை உணவாக அளிப்பதன் மூலம், 6 மாதம் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சராசரி உணவில் தேவையான புரதசத்து கிடைக்கப் பெறுகிறது.

இத்தகைய சத்து மாவை இணை உணவாக 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக 2012-13 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிஒதுக்கீடு, மக்கள் நலன் பயக்கும் இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட போதுமானதாக இல்லை என்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா மேலும் 100 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். ஆக மொத்தம் இந்த திட்டத்திற்காக, இந்த ஆண்டு 290 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் இந்த திட்டத்தின் மூலம், வலிமை மிக்க, அறிவுசார் சமுதாயம் உருவாக வழிவகை ஏற்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்