முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்துக் கழக டீசல் விலை உயர்வுக்கு தடை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.15 - அரசு போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்யும் டீசலுக்கான விலை உயர்வுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டீசலுக்கான விலை உயர்வை திரும்ப பெற கோரும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பி.ராஜ்கிஷோர் பிரசாத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் 20,500 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் 2 கோடி பேர் பேருந்தில் பயணிக்கின்றனர். இந்த சேவையை பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களே பயன்படுத்துகின்றனர். அரசு போக்குவரத்துக்கழகம் மிகப்பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்ட நிறுவனம் ஆகும். 1.29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றுகின்றனர். 

போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும், மக்களின் சேவையை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.756 கோடி இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த இழப்பை கருத்தில் கொள்ளாமல் மாநில அரசு போக்குவரத்து சேவையை திறம்பட செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் இரட்டை விலை கொள்கை பற்றி எண்ணை நிறுவனங்கள் டீசலுக்கு கடந்த ஜனவரி 18-ந் தேதி உயர்த்தியது. 

மொத்தமாக கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கான டீசல் விலையை ரூ.11.81 பைசாவாக உயர்த்தியது. சில்லரை வர்த்தகத்திற்கான டீசல் விலையை லிட்டருக்கு 55 பைசாவாக உயர்த்தியது. இந்த விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக்கழகம் ஒரு நாளைக்கு ரூ.8.57 கோடி கூடுதலாக செலவினம் அதிகரித்தது. 

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இரட்டை விலை கொள்கையானது வர்த்தக வியாபார நியாயத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இரட்டை விலை கொள்கையை திரும்ப பெறும்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஜனவரி 24-ந் தேதி கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. 

இந்த விலையேற்றமானது, ஏற்கனவே நஷ்டத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்திற்கு மேலும் நிதி சுமையை ஏற்படுத்தும். இந்த விலையேற்றமானது அரசு போக்குவரத்து பேருந்துகளை நம்பியிருக்கும் சாதாரண பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். எனவே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கான டீசல் விலையை ரூ.11.81 ஆகவும், தனியார் நிறுவனங்களுக்கான டீசலை லிட்டருக்கு 55 பைசாவாக உயர்த்தப்பட்டதை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.

எனவே இரட்டை விலை கொள்கைப்படி டீசல் விலையை உயர்த்தியதை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை சில்லரை வர்த்தக வாடிக்கையாளராக கருத உத்தரவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகத்திற்கான விலை உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நேற்று விசாரித்தார். போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எஸ்.சோமயாஜி வாதிட்டார். இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு போக்குவரத்துக்கழகம் கொள்முதல் செய்யும் டீசல் விலை உயர்வுக்கு இடைக்கால தடை விதித்தார். 

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்