முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் முறைகேடு: பி.பழனிச்சாமி வீட்டில் சோதனை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

மேலூர், மார்ச். 15 - கிரானைட் முறைகேடை தொடர்ந்து மதுரையில் உள்ள பி.ஆர்.பி. வீடு உட்பட 9 இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகளில் விதியை மீறி கற்களை வெட்டி எடுத்தது, அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தொடர்ந்து கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி, மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பி.பழனிச்சாமி மற்றும் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன ஊழியர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது பி.ஆர்.பி. உட்பட சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் பி.ஆர்.பி. மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், ஆறுமுகம், ஐயப்பன், ஊழியர்கள் அனுமந்தன், சத்யராஜ், ஆறுமுகம், ஜோதிபாசு, பரமானந்தம், கோட்டை வீரன் ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. வீடு மற்றும் ஊழியர்களின் வீடு உட்பட 9 இடங்களில் நேற்று காலை 9 தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதுரை அண்ணாநகரில் உள்ள பி.ஆர்.பி. வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். உள்ளே இருந்த ஒவ்வொரு அறைகளையும் பார்வையிட்டு அங்கிருந்த ஆவணங்களை எடுத்தனர். மேலும் ஏராளமான பீரோக்களில் இருந்து கிரானைட் மோசடி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். இதே போல் பி.ஆர்.பி.யின் உறவினர்கள் தெய்வேந்திரன், ஊழியர் அனுமந்தன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மதுரை உத்தங்குடி, லேக் ஏரியா, மேலூர், கட்டசோரன்பட்டி, மேலூர் சுற்று வட்டார பகுதியில் பி.ஆர்.பி. நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்