முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீடு: காங்., திட்டம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 16 - கிராமப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்ட மசோதாவை தயார் செய்ய காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. 2013 ம் ஆண்டு, தோட்டத்துடனான வீடு அமைக்க வழி செய்யும் தேசிய உரிமை மசோதா என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2011 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதா பார்லிமென்ட்டில் தொடர்ந்து குழப்பத்தில் உள்ள நிலையில், அடுத்ததாக வீடு அமைக்கும் உரிமை மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. 

வீடு அமைக்கும் மசோதா குறித்து தற்போது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, வரும் 18 ம் தேதி மசோதா தொடர்பான சுற்றறிக்கை மற்ற துறைகளை சார்ந்த அமைச்சர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏக்தா பரிஷித் என்ற ஆக்ராவைச் சேர்ந்த அமைப்பு கடந்த ஆண்டு முன் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் முக்கிய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்தார். 

சொந்த நிலம் மற்றும் வீடு இல்லாத கிராமப்புற ஏழைகளுக்கு 0.1 ஏக்கர் அல்லது 4356 சதுரடி நிலம் வழங்கப்படும் என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. ஏற்கனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கிராமப்புற வாசிகளுக்கும 100 நாட்கள் வேலை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வீடு வழங்கும் இந்த புதிய மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சொந்த விவசாய நிலம் அல்லது வீடு இல்லாதவர்களுக்கு 10 சென்ட்க்கும் குறையாமல் நிலம் வழங்கப்பட உள்ளது. மேலும் வசிக்கும் இடத்தில் இல்லாமல் நாட்டின் பிற பகுதியில் சொந்த நிலம் வைத்திருந்து அதற்கான வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருமானம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த புதிய மசோதாவின் கீழ் சலுகை பெற தகுதி உண்டு. 11 வது திட்ட அறிக்கையின்படி, 8 மில்லியன் பேர் வீடு இல்லாமலும், 13 முதல் 18 மில்லியன் கிராமப்புற குடும்பங்கள் நிலம் இல்லாமலும் உள்ளனர். பெண்களால் நிர்வாகம் செய்யப்படும் குடும்பங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றம் மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை 75:25 என்ற பங்கீட்டில் நிறைவேற்ற உள்ளது. 

தொழில்துறைக்கு பயன்படுத்தப்படாத நிலங்கள், மேலும் குத்தகை முடிந்து காலாவதியான நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை மாநில அரசு இந்த திட்டத்திற்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. தகுதியான வீடு இல்லாத ஏழை குடும்பங்களின் பட்டியல் கிராம சபை மூலம் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்