முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எஸ். தேர்வு முறையில் மாற்றம் நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 16 - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாற்றமும், கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாற்றங்களை செய்ததோடு கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஒரு பாடத்தில் தேர்வு எழுத வேண்டும் என்றால் குறைந்தது 25 பேர்களாவது இருக்க வேண்டும். தமிழ் மொழியை பள்ளியில் மட்டுமல்லாது, பட்டப்படிப்பிலும் விருப்பப் பாடமாக படித்திருந்தால்தான் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வில் அந்தப் பாடத்தில் தேர்வு எழுத முடியும் போன்ற மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தி மொழி படிக்காத இதர மாநில மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும். 

இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்த மாற்றத்தையும் கட்டுப்பாடுகளையும் உடனே நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் செய்துள்ள இந்த மாற்றமானது தமிழக மாணவர்களை பெரிதும் பாதிக்கும். அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த மாற்றத்தை மத்திய அரசு  நிறுத்தி வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. லோக்சபை தலைவர் தம்பித்துரை கூறினார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தேர்வாணையம் கொண்டு வரும் மாற்றம் நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிவித்தது. இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்