முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு - குழந்தைகள் நல மையங்களுக்கு மிக்சி: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.18 - ரூ.12 கோடியே 36 லட்சம் செலவில் 99,329 சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு மிக்சி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:-

இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர்.  ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான அளவு கல்வி கற்கும் வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், அழகான குழந்தைப் பருவம் ஆகியவற்றை அளித்தாக வேண்டும்.  இன்றைய குழந்தைகளை மதிப்புள்ளவர்களாக மாற்றி அவர்களை சமுதாய சொத்தாக்க உருவாக்க வேண்டும்  என்ற நோக்கத்தினை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

அறிவுசார் மனிதவளத்தினை உருவாக்குவதற்கான  நடவடிக்கையாக, பள்ளிக்கூடங்களில் பயிலும்  குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக பள்ளிகளில் சத்துணவு திட்டம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான  உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே தற்கால நிலைக்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவு அளிப்பதற்காக, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்தது.  அந்த வகையில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில்  வழங்க தமிழ்நாடு  முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் புதிய உணவு வகைகளான வெஜிடபிள் பிரியாணி, கருப்பு கொண்டை கடலை புலவு, தக்காளி சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் கீரைச் சாதங்களுடன் மசாலா கலந்த முட்டை, மிளகு முட்டை ஆகியவைகளை தயாரிப்பதற்கான செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சத்துணவு மையங்களில் குறைந்தது 100 முதல் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய வகை உணவுகள் தயாரிக்க,  இஞ்சி/பூண்டு அரவை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து பொடி செய்து உணவுடன் கலந்து தயாரிக்க வேண்டியுள்ளது. மேலும்  இஞ்சி/ பூண்டு விழுதினை அரைக்க ஒவ்வொரு மையத்திலும் அம்மி அல்லது ஆட்டுரல் வசதி ஏதும் இல்லை. எனவே,  கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்ய ஒவ்வொரு முறையும் அரவை நிலையங்களுக்கு  செல்வது  உணவு தயாரிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே   புதிய வகை உணவுகள் தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திலும் அரவை இயந்திரம் (மிக்சி)  இருக்க வேண்டியது மிகவும்  அத்தியாவசியமாகும்.  

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உட்பட,  அரவை இயந்திரம் (மிக்சி) வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக 43,787  சத்துணவு மையங்கள் மற்றும் 

9,094 குழந்தை நல மையங்களில்  6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவிலும்,  இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் 5 கோடியே 

76 லட்சத்து  42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு , தலா 

ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் 12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்