முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைப் போரின் போது தி.மு.க எடுத்த நடவடிக்கை என்ன?

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 18 - 2009 ம் ஆண்டு இலங்கை போர் நடந்த சமயத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. போர்க்குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அமெரிக்க கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்து இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அவரது கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் டி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது, 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை தெளிவானதாக இல்லை. இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு குறித்து தி.மு.க. தலைவர் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கு பெறுவதும், விலகுவதும் தி.மு.க.வின் விருப்பம். மக்கள் மத்தியில் அது பிரச்சினையில்லை. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிலும் அந்த கட்சி இடம்பெற்றது. இப்போதும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. 2009 ம் ஆண்டு இலங்கை போரின் போது தி.மு.க என்ன நடவடிக்கை எடுத்தது. தமிழின படுகொலைகள் பிரச்சினையை மத்திய அரசிடம் ஏன் எழுப்பவில்லை. 

போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதென அப்போது தன்னிடம் கூறினர் என்று தி.முக. தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவரிடம் யார் சொன்னார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும். போரில் தமிழ் மக்கள் படுகொலை மனித உரிமை மீறல் குறித்து இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஈடுபட்டது. அதனால் இன்று சர்வதேச சமூகம் இலங்கை போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுகின்றன. சர்வதேச சமூகமே கொந்தளிக்கும் போது இந்திய அரசு தெளிவான நிலையை அறிவிக்க தயங்குவது ஏன்? ஐ.நா. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று இந்தியா ஏன் சொல்ல மறுக்கிறது. 

இந்திய அரசுக்கு நேர்மையான அரசியல் நெறி இருந்தால் தீர்மானத்தை வலுவிழக்க செய்யாமல் அதனை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் தமிழ் மக்களின் நம்பிக்கை மீது இந்திய அரசு தொடுக்கும் தாக்குதல் ஆகும். அதன் அரசியல் பின்விளைவுகளை இந்திய அரசு எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்