முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., கூட்டணியில் இருந்து விலகுவது உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.18 - மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது உறுதி என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக கூறினார். இலங்கை பிரச்சினை மாணவர்கள் போராட்டத்தால் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதே அர்த்தமற்றதாகி விடும் என்று கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். 

இதுபற்றி கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நேற்று (சனிக்கிழமை) இரவு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகிய இருவருக்கும் தனித்தனியாக ஒரு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறேன். இதை தமிழிலே கூற வேண்டுமானால் இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

கேள்வி: ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் நீங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே?

பதில்: மத்திய அரசு சீரியசாக நான் குறிப்பிட்டு இருக்கும் இந்த திருத்தங்களோடு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம். 

கேள்வி: பிறமாநில பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே? 

பதில்: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம். 

கேள்வி: நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா? 

பதில்: எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் எங்களுக்கும், இந்த கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம். நீடிக்காது என்பது உறுதி. 

கேள்வி: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவும் செய்யவில்லையே? 

பதில்: அதுதான் தமிழனின் தலை எழுத்து. 

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் மத்தியில் இருந்து யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா? 

பதில்: யாரும் என்னோடு பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்