முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.19 - ஸ்ரீரங்கத்தில் 128 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.2 கோடியே  17 லட்சம் ரூபாய் செலவில் 7 புதிய வகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வி என்பது உலகத்தினை அறிந்து கொள்வதற்காக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத்தரத்தினையும் உயர்த்தும் வல்லமை படைத்த கருவியாகும். மாநிலத்தில் உயர்கல்வி வளர்ச்சி அடைந்தால்  மட்டுமே புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சிப் பெறும்.  உயர்நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும்.  அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது  உயர்கல்வியே. இத்தகு உயர் கல்வியின் வளர்ச்சிக்கும், தொழிற்கல்வியின் வளர்ச்சிக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  

உயர்கல்வியை மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவியர் பெறும் வண்ணம், சென்ற ஆண்டு 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், நடப்பு ஆண்டில் 3 பொறியியல் கல்லூரிகள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 11 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் துவக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  ஆணையிட்டார்.

 தமிழக மாணவ, மாணவியர்கள் உலகத்தரத்திற்கு ஈடான தொழில்நுட்பக் கல்வியினை பெற்று, ஒரு அறிவுசார் சமுதாயத்தை, தமிழகத்தில் உருவாக்குவதற்கு வசதியாக, தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் 128 கோடி ரூபாய் செலவில்  ஒரு புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் அடிப்படையில் அமைப்பதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதற்காக ஸ்ரீரங்கம் தாலுக்கா சேதுராப்பட்டியில் 56.37 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலத்தில் இந்திய  தகவல் தொழில்நுட்ப  கழகத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்கு சில காலம் தேவைப்படும் நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், மாணவர் நலன் கருதியும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தாலுக்காவில் உள்ள பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்திற்கு உட்பட்ட இடத்தில் தற்காலிகமாக 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்குவதற்கு  தமிழ்நாடு  முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள 7 புதிய பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு சுற்றுசுவர் மற்றும் அணுகுசாலை வசதிகள் அமைப்பதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் 31 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி  தமிழ்நாடு  முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்