முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் ரூ.50 லட்சத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.19 - ஸ்ரீரங்கம் தாலுக்காவில் ரூ.50 லட்சத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் அங்கமாக,  தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு, உயரிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல்  போன்ற பல்வேறு நடவடிக்கைகளை  தமிழ்நாடு  முதலமைச்சர்  ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்பொழுது  தோட்டக்கலைத் துறையின் மூலம் 50 அரசு தோட்டக்கலை பண்ணைகள், 10 பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவைகள் இயங்கி வருகின்றன.  இவைகளில் பழங்கள், மலர்கள், காய்கறிகள், மூலிகைப் பயிர்கள், மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்காவில் உள்ள தொரகுடி கிராமத்தில்  10 ஏக்கர் நிலப்பரப்பில் புதியதாக அரசு தோட்டக்கலை பண்ணை ஒன்றை 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரசு தோட்டக்கலை பண்ணையின் மூலம், அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்குத் தேவையான தோட்டக்கலை நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படும். பழங்கள், பூக்கள் மற்றும் மலைத் தோட்டப் பயிர்கள் போன்றவை, இந்த தோட்டக்கலைப் பண்ணை உற்பத்தி திட்டத்தில் இடம் பெறும்.  ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான நடவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் இந்தப் பண்ணை அமைக்கப்படும்.  இதன் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 30,000 விவசாயிகள் பயன் அடைவார்கள்.

தமிழகத்தில் மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீரை உயர்த்தவும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையிலும்   தமிழ்நாடு  முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் துவங்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்வடிப்பகுதிகளின் மண்ணின் ஈரத்தன்மையை மேம்படுத்தி, அதிக பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு, தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள், புதிய கிராமக் குளங்கள், ஊரணிகள் மற்றும் செறிவூட்டு குழாய் கிணறுகள் அமைத்தல் போன்ற 323 கட்டுமானப் பணிகளை, மழைநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புப் திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்