முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகலா? கருணாநிதி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.19 - இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் தி.மு.க. கூறியுள்ள 2 திருத்தங்களை மத்திய அரசு ஏற்று புதிய தீர்மானம் கொண்டு வரவில்லையென்றால் மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகுமா? என்ற கேள்விக்கு, உரிய பதில் அளிக்காமல் `அந்தர்பல்டி' அடித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:- 

இலங்கை பிரச்சினை மாணவர்கள் போராட்டத்தால் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதே அர்த்தமற்றதாகி விடும் என்று கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.  

அதில் இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியிருந்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களின் உயர்மட்டக்குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூட்டியிருந்தார். தி.மு.க. தலைவரின் எச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மத்திய அமைச்சர்களான ஏ.கே.அந்தோனி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று சென்னைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நேராக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு வந்து நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. 

அப்போது மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, இதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை கருணாநிதி எடுத்துரைத்துள்ளார் என்று தெரிகிறது.   

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் கருணாநிதியின் வீட்டிலிருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கை படுகொலை குறித்து ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா 2 திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். அது சம்பந்தமாக பேசுவதற்காக நிதியமைச்சர்  ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று (நேற்று) கருணாநிதியை சந்தித்து பேசினோம். இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறுவோம். இதுகுறித்து அவர்கள் முடிவு கூறுவார்கள் என்று கூறினார். 

இந்த பேட்டியின்போது, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் உடன் இருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி கூறியதாவது:-

ஏற்கனவே நான் பிரதமர் மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கூறிய 2 திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என என்னை சந்தித்த மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி ஆகிய மூவரை கொண்ட காங்கிரஸ் மேலிட குழுவிடம் கூறினேன். அதற்கு அவர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர் என்று கூறினார்.

இதுகுறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

நிருபர்: நீங்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதாக மூவர் குழு உறுதி அளித்ததாக கூறுகிறீர்கள். ஆனால் குலாம்நபி ஆசாத் அப்படி உறுதி அளித்ததாக கூறவில்லையே? 

கருணாநிதி: குலாம்நபி ஆசாத் எவ்வளவு நேரம் பேட்டி கொடுத்தார்?

நிருபர்: ஒன்று அல்லது 2 நிமிடம் இருக்கும்.

கருணாநிதி: அவர் ஒரு நிமிடம் பேட்டி அளிப்பார். நான் எல்லாவற்றையும் கூற இளிச்சவாயனா? (இவ்வாறு கருணாநிதி கடுப்படித்தார்)

நிருபர்: 3 பேர் கொண்ட குழு உங்களிடம் பேசியதால் உங்கள் இறுக்கம் தளர்ந்ததா? நீங்கள் கூறிய திருத்தங்களை நிறைவேற்றவில்லை என்றால் மத்திய அரசிலிருந்து விலகுவோம் என்று கூறியிருந்தீர்களே? அதில் ஏதாவது மாற்றம் உண்டா? 

கருணாநிதி: அவர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுதாக உறுதி கூறியிருக்கிறார்கள். அந்த உறுதியை நான் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். அவர்கள் உறுதியை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன். அதன் பிறகு உரிய முடிவை அறிவிப்போம். (இவ்வாறு மழுப்பலாக கூறினார்.) 

இந்த பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன் உட்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்