முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.19 - இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மீது போர்க் குற்ற பொது விசாரணை நடத்த வேண்டும், மனித உரிமையை மீறிய ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ஐ.நா. சபையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் வலுவாக்கி அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ்ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் நேற்று முதல் தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம், சாலை மறியல் என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள், கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ்ஈடுபட்டதால் அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டது என்றாலும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

மத்திய அரசும் மாணவர்கள் போராட்டத்தால் தனது முடிவை பரிசீலிக்கும் நிலையில் உள்ளது. ஈழத் தமிழர்களின் தன்னிலைக்கான மாணவர்கள் முன்னணி அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு பூட்டு போட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை  சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்யா மாணவர்களை ஒருங்கிணைத்திருந்தார். மாணவி திவ்யா தலைமையிலான இந்த குழுவில் அனைத்து கல்லூரிகளும் ஒன்று சேர்ந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

மாணவர்கள் முற்றுகை போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மாணவர்கள் கவர்னர் மாளிகைக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஈழப்படுகொலை காட்சிகள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் பிடித்திருந்தனர். 

9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 2 1ற2 மணி நேரம் நீடித்தது. சாலை ஓரமாக நடுரோட்டில் அமர்ந்த மாணவர்களிடம் அடையாறு துணை கமிஷனர் சுதாகர் 2 முறை சென்று போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் இன்னும் மாணவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். உடனடியாக போராட்டத்தை நிறுத்த முடியாது என்று கூறினர்.

பின்னர் 11.30 மணி அளவில் மாணவர்கள் அனைவரும் ஆவேசமாக கோஷம் எழுப்பியபடியே கவர்னர் மாளிகையை நோக்கி ஓடினர். இந்த போராட்டம் காரணமாக சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து கவர்னர் மாளிகை வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு போலீசார் தடுப்பு வேலிகளை சாலையில் அமைத்திருந்தனர். அவற்றை தள்ளிவிட்டு விட்டு கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிடுவதற்காக மாணவர்கள் ஓடினர். அவர்களை நூற்றுக்கணக்கான போலீசார் அரணாக நின்று தடுத்தனர்.

அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களின் கூட்டத்தை கயிறு கட்டி போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதைத்தொடர்ந்து தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர்கள் சரவணன், சுதாகர் ஆகியோர் அங்கு நேராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 அரசு பஸ்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் மாணவர்கள் 500 பேரையும் கைது செய்து ஏற்றினர். 

முன்னதாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பஸ் ஏறுவதற்காக அங்கு வந்தார். அவரும் மாணவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ராஜபக்சேவின் உருவப்படத்தை கிழித்து எறிந்து ஆவேசத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டத்தின் போது அந்த பகுதியில் போக்குவரத்து எப்போதும் போலவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையே சைதாப்பேட்டை கோர்ட்டு வாசலிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த தடுப்பு அகற்றப்பட்டது. மாணவர் போராட்டத்துக்கு கோர்ட்டில் இருந்த வக்கீல்கள் சிலரும் வெளியில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

ஆந்திர சட்டக்கல்லூரியில் பயிலும் 30 தமிழ் மாணவர்களும் அங்கிருந்து வந்து இந்த போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று ராஜபக்சே பேனரை செருப்பால் அடித்து எரிக்க முயன்றனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் அவர்களை தடுத்து நிறுத்தினார்.இந்த போராட்டத்துக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி மாணவர் டாக்டர் வீரபாகு தலைமை தாங்கினார்

ராமாபுரத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் சாலை மறியல்:

சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரம் பேர் ்ஈழத்தமிழர் பிரச்சினைக்காக நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ்டுபட்டனர்.

கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டு திடீர் போராட்டத்தில் ்டுபட்டனர். அவர்கள் 100 பேரை போலீசார் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு விட்டு வந்தனர். ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எப். நிறுவனத்தின் மைதானத்தில் வேல்டெக் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜபக்சேவை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் ஈழப் பிரச்சினையில் இறுதி முடிவு கிடைக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர்.

துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்களும் மறியல் போராட்டத்தில் ்டுபட்டனர். பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும்  போராட்டத்தில் குதித்தனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதேபோல சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் இருந்து சுங்கத்துறை தலைமை அலுவலக கட்டடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். ஒருகட்டத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி பலர் தடுப்பு வேலியை கடக்க முயன்றனர். பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி கடற்கரை சாலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு பேருந்துகள் வேற்றுப் பாதையில் விடப்பட்டன. 

நாளை (20-ந்தேதி) தமிழகம் முழுவதும் ஒரு கோடி மாணவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், முழக்கங்களை எழுப்ப உள்ளனர்.

லயோலா கல்லூரி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் தீர்மானத்தை புதைக்கின்ற இறுதி சடங்கு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் போராட்டம் எழுச்சி அடைந்திருப்பதால் கட்டாயம் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வெற்றி கிடைக்கும் என்று போராட்ட மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்