முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி வாரியத்தை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.19 - காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் பெரியாறு அணை பிரச்சினையிலும் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடக்கோரி முதல்வர் ஜெயலலிதா போராடி வந்தார். இது தொடர்பாக பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆனால் பலன் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட கெடுவும் விதித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த தீர்ப்பு கெஜட்டில் வெளியானது தனது மகத்தான சாதனை என்று முதல்வரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் தமக்கு இதுதான் மனநிறைவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக முதல்வருக்கு தஞ்சையில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. நடுவர்மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியான பிறகும் கூட காவரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநிதிநீர் ஒழுங்குமுறை குழு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி இன்னும் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாகவும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதினார். இந்த நிலையில் நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் ஜூன் மாதத்தில் இருந்து தண்ணீர் பெறுவதற்காக நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் தமிழக அரசு நேற்று சுப்ரீம்கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஆனந்த் குழு, சுப்ரீம்கோர்ட்டில் சமீபத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அணை உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகமும் கேரளமும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தெடர்ந்து தமிழக அரசு நேற்று பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேரள அரசு கோர்ட்டு உத்தரவை மீறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்