முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா: ஒருமித்த கருத்து இல்லை

திங்கட்கிழமை, 18 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.19 - பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா தொடர்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதனால் நாடே கொதித்தெழுந்தது. தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தியா கேட்டில் ஆண்களும் பெண்களும் கூடி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஜனாதிபதி மாளிகையையே முற்றுகையிட முற்பட்டனர். இந்தநிலையில் அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தப்பட்டது. டெல்லி சம்பவத்தையடுத்தும் பல இடங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிட் வீசுதல், மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தல், வரதட்சணை ஆகிய கொடுமைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்கும் வகையில் பாலியல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. அதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவது. பாலியல் கொடுமைகளால் பெண்கள் இறந்துவிட்டால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் வகையில் பாலியல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கு பாலுறவு வயதை 18 வயதில் இருந்து 16 வயதாக குறைக்கவும் அந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த மசோதாவை இந்தநிலையில் ஆதரிக்க மாட்டோம் என்று பாரதிய ஜனதா, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இருந்தபோதிலும் இந்த மசோதா நிறைவேறும் அளவுக்கு ஆதரவு இருந்தாலும் அதிக ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று மத்திய அரசு கூட்டியது. கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. குறிப்பாக இந்த மசோதாவில் பாலுறவு வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க கடும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சட்ட திருத்த மசோதாவை யாரும் தவறுதலாக பயன்படுத்திவிடக்கூடாது என்றும் கூட்டத்தில் பல தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர். அதனால் பாலுறவு வயது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் அதன் கருத்து குறித்து பெரும்பாலும் ஆதரவு தெரிவித்தாலும் அந்த மசோதாவில் உள்ள சில சரத்துக்களை வைத்து தவறுதலாக சில நேரங்களில் பயன்படுத்தக்கூடும் என்று பல தலைவர்கள் கருத்து தெரிவித்தனர் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார். பாலுறவு வயது ஏற்கனவே இருந்தபடி 18 வயதாகத்தான் இருக்கக்கூடாது அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 16 வயதாக குறைக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா, சமாஜ்வாடி மற்றும் இதர கட்சி தலைவர்கள் கூறினர். ஒரு சில கட்சி தலைவர்கள் பாலுறவு வயது 16 ஆக இருப்பது சரிதான் என்று கூறினர். இந்த சட்டத்திருத்த மசோதாவை அரசியல் எதிரிகள் மற்றும் குடும்ப பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புவர்கள் தவறுதலாக பயன்படுத்த முடியாதபடி தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர் என்று கமல்நாத் கூறினார். இந்த மசோதாவில் தேவையான திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் எளிதாக நிறைவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று கமல்நாத் கூறினர். இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் வரும் 22-ம் தேதிக்குள் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்தாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்