முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புட்டபர்த்தி சாய்பாபா காலமானார் லட்சக்கணக்கானோர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புட்டபர்த்தி,ஏப்.- 25 - ஆன்மீக குரு புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா கிட்டத்தட்ட ஒரு மாத உயிர் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலமானார். அவரது உயிர் நேற்று காலை 7.40 மணியளவில் பிரிந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சாய்பாபாவின் உடல் புதன்கிழமையன்று நல்லடக்கம் செய்யப்படும். ஆந்திர மாநில மக்களால் புட்டபர்த்தி சாய்பாபா என்று அன்போடு அழைக்கப்பட்ட சாய்பாபாவின் உடல் நிலை கடந்த சில நாட்களாகவே மோசமான நிலையை அடைந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரை கவனித்து வந்த டாக்டர்கள் தெரிவித்து வந்தனர்.  

இது குறித்து சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஏ.என். சபையா 2 தினங்களுக்கு முன் கூறுகையில், 

சாய்பாபாவுக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவரது கல்லீரல் செயல்படவில்லை என்றும் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருப்பதாகவும் இது தங்களுக்கு பெரும் கவலையளிப்பதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார்.  அவரது இதய துடிப்பு குறைந்து வருவதாகவும் டாக்டர் சபையா தெரிவித்திருந்தார். 

மேலும் சாய்பாபாவின் உடல் நிலை தேற வாய்ப்பே இல்லை என்றும் டாக்டர்கள் கூறினர். ஆனால் அவரது பக்தர்களோ, சாய்பாபா நோயில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் ஆன்மீக குரு சாய்பாபா, நேற்று காலையில் காலமானார். அவரது உயிர் காலை 7.40 மணியளவில் பிரிந்ததாக டாக்டர் சபையா தெரிவித்தார். 

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்த்தவர் சாய்பாபா. கடந்த 28 நாட்களாக இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். குறிப்பாக, இருதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் இவரது உடலின் முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தன. இதையடுத்து ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை இவரது உயிர் பிரிந்தது. 

உயிர் பிரிந்தது:

ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் இவரால் உருவாக்கப்பட்ட மருத்துவமனை ஸ்ரீசத்யசாய் உயர் மருத்துவ விஞ்ஞான மையம் என்பதாகும். இந்த மருத்துவமனையிலேயே நேற்று சாய்பாபாவின் உயிர் பிரிந்தது. சாய்பாபாவின் மரணம் பற்றிய தகவலை இந்த மையத்தின் இயக்குனரும், பிரபல டாக்டருமான சபையா அதிகாரபூர்வமாக தெரிவித்தார். சாய்பாபா உடலால் தற்போது நம்மிடையே இல்லை. அவரது பக்தர்கள் மருத்துவமனையை நோக்கி திரண்டு வர வேண்டாம். மிகுந்த பொறுமையும், அமைதியும் காக்க வேண்டும். முறைப்படியான இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று டாக்டர் சபையா கேட்டுக் கொண்டார். சாய்பாபாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் சாய் குல்வந்த் ஹாலில் வைக்கப்படும். பின்னர் புதன் கிழமையன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். 

வாழ்க்கை வரலாறு:

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்ட சத்ய சாய்பாபா, 1926 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது தாயார் பெயர் ஈஸ்வரம்மா. தந்தை பெயர் பெத்த வெங்கண்ண ராஜூ. நான்காவது குழந்தையாக பிறந்த பாபாவின் இயற்பெயர் ரத்னாகரம் சத்ய நாராயண ராஜூ என்பதாகும். சிறு வயதில் இருந்தே சாய்பாபாவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்து வந்தது. பின்னர் 1940 ல் இந்த ஈடுபாடு அதிகரித்தது. 1940 ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி சாய்பாபா சன்னியாச வாழ்க்கைக்கு மாறினார். 

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பல இலவச மருத்துவமனைகளை துவக்கி வைத்தவர் சாய்பாபா. மருத்துவம், கல்வி, கிராம முன்னேற்றம் போன்ற பல துறைகளில் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றியவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ. 200 கோடி கொடுத்தவர் சாய்பாபா. இப்படியாக மக்கள் சேவையாற்றியதால் இவருக்கு உலகம் முழுவதும் நன் மதிப்பும் மரியாதையும் இருந்து வருகிறது. சாய்பாபாவின் இறுதி சடங்கிற்கான பொறுப்பை ஆந்திர அரசு ஏற்றுள்ளது. அம்மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைவர்கள் இரங்கல்:

சாய்பாபாவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லட்சக்கணக்கான மக்கள் சாய்பாபாவின் நன்னெறிகளை பின்பற்றி ஊக்கமடைந்ததாக தெரிவித்தார். 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு மனித குலத்திற்கு ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பு என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா விடுத்துள்ள அறிக்கையில், சாய்பாபாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என்று கூறியுள்ளார். மறைந்த சத்ய சாய்பாபா சென்னையில் 1981 ம் ஆண்டு சுந்தரம் மந்திர் என்ற அமைப்பை நிறுவினார். இங்கு சாய்பாபா மறைந்ததையடுத்து நேற்று பஜனை பாடல்கள் பாடப்பட்டன. 

பலத்த பாதுகாப்பு:

சாய்பாபா மறைவையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் ஆந்திராவை நோக்கி வரக்கூடும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புட்டபர்த்தியில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் வேறு எந்த நிறுவனங்களுமே திறக்கப்படவில்லை. ஆந்திர மாநிலம் தற்போது சோகக் கடலில் மூழ்கியிருக்கிறது. அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்றும் அவர் ஆலோசனை நடத்தினார். 

அடுத்து ஆளப் போவது யார்?

ஆன்மீக குரு என்றும் பகவான் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். பகவானுடைய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் 35 ஆயிரம் கோடி முதல் 40 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாக கையிருப்பில் உள்ளன. பாபாவுக்கு பிறகு தங்களுக்கு நல்வழி காட்ட யார்? அவர் தொடங்கி நடத்தி வந்த அறப்பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை தற்போது அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லையாம். அவ நம்பிக்கைதான் நிலவுகிறதாம். 1964 ல் சத்யசாயி மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவராக இருந்தார். இதன் நிர்வாக குழு 2010 ல்தான் திருத்தி அமைக்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல ஒரு புரிந்துணர்வு சுத்தமாக இல்லை. எனவே இந்த மிகப் பெரிய ஆன்மீக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற மாபெரும் கேள்விக்கு யாருக்கும் விடை தெரியவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்