முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி விவகாரம்: சி.பி.ஐ. குழு மலேசியா பயணம்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 20 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிரான ஏர்செல்- மேக்சிஸ் பங்குகள் விற்பனை வழக்கில் சி.பி.ஐ குழு நேற்று  மலேசியா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தது. ஆனால் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்க சிவசங்கரனை தயாநிதி வற்புறுத்தியதாகவும் இதனால் அவருக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யாமல் இருந்ததாகவும் சிவசங்கரன் சி.பி.ஐ. யிடம் வாக்குமூலம் தந்தார்.

இந்த நெருக்கடியால் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும், அதை மேக்ஸிஸ் வாங்கிய உடனேயே ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தயாநிதி ஒதுக்கீடு செய்தாதகவும் சிவசங்கரன் கூறியுள்ளார். இதற்கு பிரதிபலனாக சன் டி.டி.எச். நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் பல நூறு கோடி ரூபாயை மேக்ஸிஸ் முதலீடு செய்தது என்பது சி.பி.ஐ. யின் வழக்கு ஆகும்.

மேலும் இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பான விசாரணையின் நிலவரத்தை சி.பி.ஐ. வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், இந்த வழக்கில் இந்தியாவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. மலேசியாவில் உள்ள சில பிரமுகர்களுக்கு வழக்கில் தொடர்பு உள்ளதாகத் தெரிய வருகிறது. இது தொடர்பாக மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சில விவரங்களை சிபிஐ பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மலேசியாவின் அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ரீதியான கருத்தைப் பெற சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது என்றார். 

மேலும் சி.பி.ஐ அதிகாரிகளை 21 ம் தேதி சந்திக்க அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் நேரம் ஒதுக்கியுள்ளார். ஏர்செல்- மேக்சிஸ் பங்குகள் வாங்குவதற்கான பணம் மொரீஷியஸில் இருந்து வந்துள்ளது. அதை நிரூபிக்க, வெளிநாடுகளில் விசாரணை நடத்துவது மிகவும் அவசியமாகிறது. அதனால், மலேசிய அட்டர்னி ஜெனரலை சந்தித்து பேசிய பிறகுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு விசாரணை செல்லும் என்றார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தயாநிதி மாறனின் பங்கை நிரூபிப்பதில் சி.பி.ஐ தாமதமாக செயல்படுகிறது என்றார். பின்னர் ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக மத்திய கண்காணிப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த அறிக்கை மீது சி.பி.ஐ., வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் எனநீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 2 வது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்