முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத்தமிழருக்கு இந்திய அரசு வஞ்சகம்: வைகோ

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.20 - ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. எனவே இன்று மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்  என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் சுதந்திரத் தமிழ் ஈழம் கோரியும், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை குற்றக் கூண்டில் நிறுத்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், வீரம் செறிந்த உறுதிமிக்க அறப்போர் நடத்தும் நிலையில், ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு ஆதரவான வேலைகளைத் தீவிரமாகவும், ரகசியமாகவும் இந்திய அரசு செய்து வருகிறது.

அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தமான திருத்தம் வேண்டும் என்று ஒருசிலர் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், அமெரிக்கத் தீர்மானத்தில் சிங்கள அரசை வலியுறுத்தும் ஒருசில வாசகங்களையும் நீக்கச் செய்துவிட்டது. குறிப்பாக, இலங்கைத் தீவில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள மனித உரிமை ஆணையர் அறிவித்த பரிந்துரையை நீக்கி உள்ளதாகத் தெரிகிறது.

தரணி வாழ் தமிழர்களையும், தமிழ் ஈழ உணர்வாளர்களையும், ஆவேசமாகப் புரட்சி பூபாளம் ஒலிக்கும் தமிழ் மாணவர்களையும் இந்த மோசடி வேலைகளால் ஏமாற்ற முடியாது. சரியான, முறையான இலக்கைத் தீர்மானித்து, தமிழக மாணவர்கள் தொடர்ந்துள்ள உரிமைப் போர், ஈழத் தமிழருக்கு நீதியும், பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும் வரை புதிய புதிய பரிமாணம் எடுத்து நீடிக்கும்.

தமிழ்க் குலம் மாணவர் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளது. எனவே, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டு அமைப்பின் சார்பில், 20 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்