முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்: 2 வது குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல்- தயாளு, கனிமொழி பெயர்கள் இடம்பெறும்?

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஏப்.- 24 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை இன்று திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரது பெயர்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உலகிலேயே மிகப் பெரிய ஊழலாக வர்ணிக்கப்படுவது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். காரணம், இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி வினோத்ராய் தெரிவித்தார். ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, பின்னர் அதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. பிறகு முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவரிடம் சி.பி.ஐ. பல கட்ட விசாரணைகளை நடத்தியது. அந்த விசாரணைக்கு பிறகே ஆ. ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, மற்றொரு முன்னாள் உதவியாளர் சித்தார்த்த பெகுரா மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் தற்போது திஹார் சிறையில் உள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறையால் நடத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 2 ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் ஆ. ராசா, சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, பல்வா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் 2 வது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.  
இந்த நிலையில் சினியுக் நிறுவனம் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் அம்பலமானது. அதைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் சி.பி.ஐ. யால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இப்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 2 வது குற்றப்பத்திரிக்கை இன்று திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி, ஸ்வான் நிறுவனத்தின் அதிபரான பல்வாவின் சகோதரர் ஆகியோரது பெயர்கள் இடம்பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, சோனியா மற்றும் சிலரது பெயர்களும் கூட சேர்க்கப்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறி வருகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இதனிடையே அடுத்த மாத வாக்கில் இந்த ஊழல் தொடர்பாக 3 வது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்