முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியிலிருந்து விலக கருணாநிதி முடிவு எடுத்தது ஏன்?

புதன்கிழமை, 20 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 21 - காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து தி.மு.க வெளியேறியதன் பின்னணியில் கடந்த இரு நாட்களில் நடந்த விறுவிறுப்பான விவகாரங்கள் தற்போது வெளியில் வர ஆரம்பித்துள்ளன. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி என்பது கருணாநிதி, சோனியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கையோடு நீடித்த கூட்டணி. முதல் 6 ஆண்டுகள் மிக மிக நெருக்கமான கூட்டணியாகத்தான் இது இருந்தது. எப்போது 2 ஜி ஊழல் விவகாரம் வெளியே வந்ததோ அப்போது தான் இந்தக் கட்சிகளிடையே முதலில் விரிசல் விழுந்தது.

அடுத்து ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனாரோ, அன்று முதல் இந்தக் கூட்டணியின் விரிசல் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. கருணாநிதியை ராகுல் காந்தி ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலை இருந்து வந்தது. அதிலும் ராகுல் காங்கிரஸ் துணைத் தலைவரான பிறகு, இந்தக் கூட்டணியே வேண்டாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து விட்டாராம். சோனியாவைப் போல கூட்டணிக் கட்சிகளை மதிக்கவோ, அவர்களுடன் ஆலோசிக்கவோ தெரியாத பிள்ளை ராகுல் என்று உணர்ந்தாராம் கருணாநிதி.

தன்னைச் சுற்றியுள்ள அதிமேதாவிக் கூட்டத்தை நம்பி அரசியல் நடத்தும் அவருக்கு அடுத்தடுத்து பல மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பலத்த தோல்வி ஏற்பட்டது. ஆனாலும், ராகுல் தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகளையும் வேட்பாளர்களையும் முடிவு செய்யப் போகிறார்.

ராகுல், கருணாநிதி ராசி ஆரம்பத்தில் இருந்தே சரியில்லாத நிலையில், அவருடன் இணைந்து அரசியலைத் தொடர கருணாநிதி விரும்பவில்லையாம். மேலும் கருணாநிதியின் கூரிய மூளைக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தேசிய அளவில் மரண அடி வாங்கப் போவதும் தெரிந்து விட்டது. 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவே ஒளிர்கிறது என்ற போலியான பிரமையை பா.ஜ.க ஏற்படுத்தி வைத்திருந்த நேரத்தில், காங்கிரசுக்கே ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிக் காட்டியவர் கருணாநிதி. காரணம், அடுத்தத் தேர்தலில் பா.ஜ.க. மூழ்கப் போகிறது என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தாராம். அவர் நினைத்த மாதிரியே பா.ஜ.க அந்தத் தேர்தலில் மரண அடி வாங்கியது, 

இப்போதும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் மீது நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 120 இடங்கள் கிடைத்தாலே பெரிய விஷயம் தான். இதனால் காங்கிரசோடு கூட்டணியைத் தொடர்வது தற்கொலைக்கு சமம் என்பதை கருணாநிதி உணர்ந்து கொண்டு விட்டார். இதற்கு இலங்கை விவகாரத்தை சமயம் பார்த்து கையில் எடுத்தார். உலக அளவில் இலங்கை விவகாரம் பெரிதான நிலையில், தமிழகத்திலும் இந்தப் பிரச்சனைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளதையும் மனதில் வைத்து, இதுவே சரியான சமயம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து அஸ்திரத்தை ஏவி விட்டார். 

டெல்லிக்கு ஒரு போனைப் போட்ட அவர், அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் செய்ய வேண்டும், தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்று கறாராகக் கூற, பதறிப் போன காங்கிரஸ் தலைமை அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோரை அனுப்பியது.

அவர்களிடம் இலங்கை அரசு இனப் படுகொலையில் ்ஈடுபட்டது, இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை போன்ற வாசகங்களுடன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கருணாநிதி புதிய குண்டைப் போடவே, மத்திய அமைச்சர்களின் முகம் வெளிறிப் போனதாம். நாடாளுமன்றத்திலும் தீர்மானமா, நீங்க திடீர் திடீர்னு நிலையை மாற்றிக் கொள்கிறீர்கள். என்று குலாம் நபி ஆசாத்தும் ப.சிதம்பரமும் கூற, கடுப்பாகிப் போனாராம் கருணாநிதி. 

நான் நிலை மாறுகிறேனா. 9 வருடமா உங்களை தூக்கி சுமக்குறேன், இந்த 9 வருடத்தில் தி.மு.க சந்தித்த இழப்பு போல் என் வாழ்க்கையில் எப்போதுமே சந்தித்ததில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்தில்கூட தி.மு.க வுக்கு இவ்வளவு செல்வாக்கு இழப்பு ஏற்பட்டதில்லை, நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன், எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துறீங்க என்று பொங்கிய கருணாநிதி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதா இருந்தா மேலே பேசுவோம். போயிட்டு வாங்க என்று கூறிவிட்டார்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்திகிட்டே ஆலோசித்துவிட்டு பதில் சொல்றோம், அதே நேரத்தில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டாலும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈ்டுபட்டது போன்ற வாசகங்கள் இல்லாவிட்டாலும், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று உறுதி அளித்தார்களாம் மத்திய மந்திரிகள். 

இந்த உறுதியை நம்பி கருணாநிதி காத்திருக்க, செவ்வாய்க் கிழமை அதிகாலை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை என்ற தகவல் ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் மூலம் கருணாநிதிக்குக் கிடைத்துள்ளது.

அதில், இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் என்ற வாசகத்துக்குப் பதிலாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறுகிறோம் என்ற வகையிலேதான் வாசகங்கள் இருக்கவே, நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்டாங்க என்று கூறியபடி, மூத்த திமுக தலைவர்களையும் டெசோ தலைவர்களையும் அழைத்து உடனடியாக ஆலோசனை நடத்தியுள்ளார் கருணாநிதி.

இனியும் இந்தக் கூட்டணியிலே நீடிக்கனுமா என்ற கருணாநிதியின் கேள்விக்கு, வேண்டாம் என்பதே அனைவரின் பதிலாகவும் இருந்துள்ளது. குறிப்பாக ஸ்டாலின் இந்த விஷயத்தில், மிகத் தீவிரமாக இருந்துள்ளார். இதனையடுத்தே கருணாநிதி தனது விலகல் முடிவை அறிவித்தார் என்கிறது தி.மு.க டெசோ வட்டாரங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்