முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலகல் முடிவு: அழகிரியிடம் சோனியா கேள்வி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 22 - மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கும் முன்பாக உங்கள் தந்தை கருணாநிதி ஒன்று பிரதமரிடம் பேசியிருக்க வேண்டும். அல்லது என்னிடமாவது பேசியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி மு.க. அழகிரியிடம் வேதனையோடு தெரிவித்தாராம். 

இலங்கை பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைத்தார். அந்த கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிப்பதாக கூறி விட்டு மத்திய அமைச்சர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் மறுநாள் காலையிலேயே தி.மு.க. தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அவரது இந்த முடிவு தங்களுக்கு வியப்பளிப்பதாக ப. சிதம்பரம் முதல் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் தெரிவித்தனர். 

ஆனால் கருணாநிதியோ அமெரிக்க தீர்மானம் நீர்த்துப் போய் விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வந்த பிறகுதான் தான் இந்த முடிவை எடுத்ததாக விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சராக இருந்த மு.க. அழகிரி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பதற்காக அவர் பிரதமரை சந்தித்ததாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. பிறகு மு.க. அழகிரி காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சோனியா காந்தி வருத்தப்பட்டு சில விஷயங்களை தெரிவித்தாராம். 

உங்கள் தந்தையின்(கருணாநிதி) இந்த திடீர் முடிவு எங்களுக்கு வியப்பளிக்கிறது. வேதனையும் அளிக்கிறது என்று சோனியா அழகிரியிடம் குறிப்பிட்டார். விலகல் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக உங்கள் தந்தை பிரதமரிடம் பேசியிருக்க வேண்டும். அல்லது என்னிடமாவது பேசியிருக்க வேண்டும் என்று சோனியா மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டாராம். அதற்கு பதிலளித்த அழகிரி, இது தி.மு.க மேலிடத்தின் முடிவு. அதற்கு நான் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறினாராம். 

முன்னதாக அவர் பிரதமரை சந்தித்த போது பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க.வுடனான தனது மலரும் நினைவுகளை அள்ளித் தெளித்தாராம். இந்த சந்திப்பின் போது மு.க. ஸ்டாலின் பற்றியும் பேச்சு அடிபட்டதாம். கருணாநிதி இப்படி முடிவெடுப்பதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவரைப் பற்றிய பேச்சும் மேல்மட்டத்தில் அடிபட்டுள்ளது. இதனிடையே தி.மு.க. மந்திரிகளின் ராஜினாமாக்களை பிரதமர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார். அதன் பிறகு ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும். முன்னதாக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்தவுடன் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் அழகிரியை லோக்சபையிலேயே சந்தித்து இது உண்மைதானா என்று வியப்போடு கேட்டார்களாம். உடனே அழகிரி சென்னைக்கு தொடர்பு கொண்டு தன் அப்பாவின் நெருங்கிய உதவியாளரிடம் அது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாராம். பதவியை ராஜினாமா செய்துள்ள அழகிரியின் மகன் துரை தயாநிதி சட்டவிரோத சுரங்க தொழிலில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்