முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபையில் வரியில்லா பட்ஜெட் தாக்கல்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.22 - வளர்ச்சியை மையமாகக் கொண்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவின்படி புதிய வரிவிதிப்புகளோ, தற்போது  இருக்கும் வரிகளில் உயர்வோ   இல்லை என்று  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2013-14-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்பித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசின் சொந்த வரி வருவாய்:

பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மாநிலத்தின் வரி வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகளில், குறிப்பாக, உற்பத்தி துறையில் ஒரு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எனினும்,  இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பொருளாதார நிலை சீரமைக்கப்பட்டு வருவதால், மதிநுட்பமிக்க கொள்கை முடிவுகளின் மூலம்  2012-2013 ஆம்  ஆண்டு வரவு-செலவுத் திட்ட  வரி வசூல் இலக்கு எய்தப்படும் என்று  நான் உறுதியாக நம்புகிறேன்.

மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின் விகிதாச்சாரத்தில்  நாட்டிலேயே சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக நமது மாநிலம் திகழ்கிறது.  2011-2012 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9.3  ஆக இருந்தது.  2012-2013 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி இந்த விகிதம் 10.3 ஆக உயர்ந்துள்ளது. ஒளிவு மறைவற்ற வரி நிருவாகம் மற்றும் திறமையான வரி வசூல் முறை ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின்  சதவிகிதம்  உயர்ந்து வருகிறது.  2013-2014 ஆம்  ஆண்டிலும் இது சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.

அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்த பொருளாதார வளர்ச்சி போன்ற சூழ்நிலைகளில், மேம்போக்கான  நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்தாது.  நிதிச் சிக்கனம், முதலீடு செய்வதற்கான ஊக்கம்,  ஒளிவு மறைவற்ற நிருவாக அணுகுமுறை, ஆகியவையே மாநில அரசு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும்.  பொருளாதாரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற சிறிய அறிகுறி தென்பட்டாலும், ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடைய தலைவர் அந்த அபாயத்தினை  மதிப்பீடு செய்து பிரச்சனையினை தவிர்ப்பதற்குரிய வழியையே காணுவார். எனவே, முக்கியச் செலவினங்களுக்கும், நிதி ஆதாரங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பொதுவான மந்தநிலை, மாநில பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை கருத்தில் கொண்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிவிதிப்போ, நடைமுறையிலுள்ள வரி விகிதத்தினை  உயர்த்துவதோ  தேவையில்லையென முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.

2012-2013 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை காட்டிலும், 2013-2014 ஆம் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரிவருவாய் 17 சதவிகிதம் உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இலக்கு 86,065.40 கோடி ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது.  வணிக வரி 56,025.24 கோடி ரூபாயாகவும், ஆயத் தீர்வை 14,469.87 கோடி ரூபாயாகவும், மோட்டார் வாகன வரிகள் 4,881.15 கோடி பொயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  2013-2014 ஆம் ஆண்டில்,  பத்திரப் பதிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முத்திரைத்தாள்  தீர்வை  மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 9,874.22 கோடி ரூபாய் வசூலாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கடன்

2012-2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு  அனுமதிக்கப்பட்ட  நிகர பொதுக் கடன் 20,716 கோடி ரூபாயாகும்.  இருப்பினும், அரசின்  கடன் சுமையினை கட்டுப்படுத்த  அளித்த வாக்குறுதியை  நிறைவேற்றும் வகையில்,  நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் 15,675 கோடி ரூபாய் மட்டுமே 2012-2013 ஆம் ஆண்டில் நிகரக் கடனாகப்  பெறப்பட்டுள்ளது.  இந்த நிகரக் கடன், மூலதனச் செலவினத்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், இந்த கடன் முழுவதும் மூலதனச் செலவுகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின்  மொத்த உற்பத்தி  மதிப்பில், கடனின் அளவு 24.5 சதவீதம் வரை இருக்கலாம் என்ற வரையறை இருந்தாலும், கடன் அளவு 18.98 சதவீதம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிகரக் கடன் அளவு 24,263 கோடி ருபாயாக இருப்பினும், மூலதன  செலவிற்காக 21,142 கோடி ரூபாய்  மட்டுமே நிகரக் கடனாகப் பெற  இந்த அரசு உத்தேசித்துள்ளது.

நிதிநிலை குறியீடுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த அரசு நிதி நிலைமையினை திறம்பட சீரமைத்துள்ளது.  2010-2011 ஆம் ஆண்டில் 2,728.69 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்த நிலையில், கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளை வருவாய் உபரியோடு இந்த அரசு வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது.  2012-2013 ஆம் ஆண்டு 

வரவு-செலவுத் திட்டத்தில், 2,376 கோடி ரூபாய் வருவாய் உபரி இருக்கும் என கணிக்கப்பட்டது.  ஆனால், செலவினங்கள்  அதிகரித்ததன் காரணமாகவும், குறிப்பாக, இந்த அரசு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் நிதி நிலைக்கு புத்துயிரூட்ட வழங்கிய நிதியுதவியினாலும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வருவாய் கணிசமாக  குறைந்ததன் காரணமாகவும், திருத்த மதிப்பீட்டில் வருவாய் உபரி 451.52 கோடி ரூபாயாக மட்டும் இருக்கும்.  இருப்பினும், நிதிப் பற்றாக்குறை 19,889.31 கோடி ரூபாய் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 

2.88 சதவீத அளவில் மட்டுமே இருக்கும். இந்த இரண்டு வரையறைகளும் தமிழ்நாடு நிதிநிலைப் பொறுப்புடைமைச் சட்டம் 2003-இல் வரையறுக்கப்பட்டுள்ள குறியீடுகளுக்கு உட்பட்டும், பதின்மூன்றாவது  நிதிக் குழுவின் வரையறைக்கு உட்பட்டும் உள்ளன.

2013-2014 ஆம் ஆண்டில் வருவாய் உபரி 664.06 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 22,938.57 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.84 சதவிகிதம் அளவிலேயே இருக்கும்.  இது  நிர்ணயிக்கப்பட்ட அளவான மூன்று சதவீதத்திற்கு  குறைவானதாகும்.

நிதிநிலை அறிக்கையின் இணைப்பில், இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நிதிநிலை அறிக்கையின் ஒரு பகுதியாக படிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

வளர்ச்சியை மையமாக கொண்டு, அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டத்தினை அளிப்பதற்கு இயன்ற அளவு முயன்றுள்ளேன்.  கடுமையான நிதி நெருக்கடி நிலவிவரும் சூழ்நிலையிலும், இந்த  நிதிநிலை அறிக்கையில், பல புதிய முயற்சிகளும், நடப்புத் திட்டங்களுக்கான  ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொது விவாதம், மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறும் பொழுது முதலமைச்சராலும், அமைச்சர்களாலும் மேலும் பல அறிவிப்புகளும் திட்டங்களும்  வெளியிடப்படும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமான இக்காலங்களில் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநிலம்  வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகாமல், நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிட வேண்டும் என்ற நமது குறிக்கோளை நோக்கி பீடுநடை போடும் என இந்த அரசு உறுதியாக நம்புகிறது.  

தமிழக முதலமைச்சர், தாம் அரசியலுக்கு வருவதற்கு மிகப்பெரிய தூண்டுகோலாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் திருவாக்கான

எழுமின்! விழிமின்!

வெற்றி இலக்கை எய்தும் வரை 

நில்லாது செல்மின் 

என்னும் கட்டளையை இதயத்தில் ஏந்தி, தமிழர்களின் நலம் - தமிழகத்தின் வளம்ா  என்னும் குறிக்கோளை அடைந்திட பசி நோக்காது, கண் துஞ்சாது, ஓய்வு என்பதை அறியாது முதலமைச்சர்  உழைத்து வருகிறார்.  அரிமா நோக்குடன் அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்து, மக்கள் நலன் ஒன்றையே முதன்மை நோக்கமாகக் கொண்டு, புதிய திட்டங்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்கி, இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளார்.   முதலமைச்சரின் தேர்ந்த நிர்வாகத் திறன், தெளிவான தொலைநோக்கு, திறன்மிகு அறிவாற்றல், ஆழ்ந்த அனுபவம், அளவிலா புத்திக் கூர்மை ஆகியவை இந்த வரவு-செலவுத் திட்டத்தை சிறப்புடன் வடிவமைத்திட வழிவகுத்துள்ளன. இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்கு வழிகாட்டியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகளை  முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கையினைத் தயாரிப்பதில் என்னோடு முழுமையாக ஒத்துழைத்த நிதித்துறை முதன்மைச் செயலாளர்  க.சண்முகத்திற்கும் அவருடன் அயராது பணியாற்றிய நிதித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் இத்தருணத்தில்  என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் 2013-2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிற்கு அவையின் ஓப்புதலைப் பெற்று தருமாறு,  பேரவைத் தலைவர் அவர்களை நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதையடுத்து, வரவு செலவு திட்ட அறிக்கையுடன் இடைப்பட்ட கால நிதி நிலவரத்திட்டம் குறித்த அறிக்கை ஒன்றையும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்