இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் இந்தியாவுக்கு திரும்பினர்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.22 - சுப்ரீம்கோர்ட்டு விதித்த கெடுவின்படி இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் இந்தியாவுக்கு நேற்று இரவு திரும்பினர். விதித்த கெடுவுக்குள் அவர்கள் திரும்பிவிட்டதால் கைது செய்யப்படமாட்டார்கள். கேரள கடல் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த 2 மீனவர்கள் மீன்படித்துக்கொண்டியிருந்தனர். அப்போது அந்த வழியாக சிங்கப்பூரில் இருந்து இத்தாலி நாட்டு கப்பல் சென்றுகொண்டியிருந்தது. கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் 2 பேர் இயந்திரா துப்பாக்கியால் மீனவர்களை பார்த்து சுட்டனர். இதில் கேரள மீனவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மஸ்ஸிமிலியானோ லத்தோர், சல்வதோர் ஜிரோனே ஆகிய கப்பல் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கேரள கோர்ட்டில் நடைபெற்று வரும்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதற்கு கோர்ட்டு அனுமதி கொடுத்தது. அதன்படி அவர்கள் இத்தாலி சென்றுவிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு வந்தனர். அதன் பின்னர் இத்தாலி பொதுத்தேர்தலில் ஓட்டளிப்பதற்காக மீண்டும் செல்ல வேண்டும் என்று கோரினர். இதற்கு கேரள ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கப்பல் பாதுகாவலர்கள் இருவரும் சுப்ரீம்கோர்ட்டிற்கு சென்றனர். சுப்ரீம்கோர்ட்டும் முதலில் மறுத்துவிட்டது. பின்னர் இந்தியாவுக்கான இத்தாலி நாட்டு தூதர் உத்தரவாதம் அளித்த பின்னர் இவர்கள் இருவரும் ஓட்டுப்போடுவதற்காக இத்தாலி செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் 4 வாரத்திற்குள் அவர்களி இருவரும் இந்தியாவுக்கு திரும்பவேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கெடுவிதித்தது. இதற்கிடையில் இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு அறிவித்துவிட்டது. இதனால் கோபம் அடைந்த சுப்ரீம்கோர்ட்டு இத்தாலி நாட்டு வீரர் இந்தியாவை விட்டு வெளியேற தடைவிதித்தது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் இருநாடுகளுக்கிடையே உறவில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. அதேசமயத்தில் இருநாடுகளின் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கப்பல் பாதுகாவலர்கள் 2 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கமாட்டோம் என்று இந்தியா சார்பாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையேற்று அந்த 2 பேரையும் இத்தாலிய அரசு திருப்பி அனுப்பியது. அவர்கள் இருவரும் நேற்று டெல்லி திரும்பினர். இதற்கிடையில் இந்த வழக்கு குறித்து தனிக்கோர்ட்டு அமைக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புக்கொண்டபடி விரைவில் தனிக்கோர்ட்டு அமைத்து விசாரணை டெல்லியில் நடைபெறும். விசாரணை முடியும் வரை அவர்கள் 2 பேரும் டெல்லியிலேயே தங்கி, சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் இருப்பார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்: