முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தல்: பிரச்சாரத்தை துவக்கியது பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், மார்ச். 23 - கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று பாரதீய ஜனதா கட்சி துவக்கியது. மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவோம் என்று கூறியிருக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். மேலும் பிரச்சாரத்திற்கு நரேந்திர மோடியை அழைக்கப் போவதாகவும் பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து அம்மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் 5 ம் தேதி இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு மே 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே ஆளும் பாரதீய ஜனதா கட்சி தனது பிரச்சாரத்தை முறைப்படி துவக்கி விட்டது. மைசூரில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, துணை முதல்வர் ஈஸ்வரப்பா மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில பா.ஜ.க தலைவர் ஜோஷி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். 

பிறகு பாரதீய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவரான ஜோஷி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நடந்து முடிந்த கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் சின்ன கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவது வீண் என்பதை கர்நாடக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். ஆகவே எடியூரப்பா கட்சி எல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல என்றார் ஜோஷி. 

கர்நாடக முதல்வர் ஷெட்டர் இது பற்றி கூறுகையில், பாரதீய ஜனதா அரசு தன்னுடைய பதவிக் காலத்தை வெற்றிகரமாக முடித்து விட்டது. எனவே தனி மெஜாரிட்டியுடன் நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். மேலும் இம்மாநிலத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இம்மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி,  காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் எடியூரப்பா கட்சி என நான்கு கட்சிகள் இத்தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. சில இடங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடி போட்டி இருக்கும். இன்னும் சில இடங்களில் பா.ஜ.க , காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவும். ஒரு சில இடங்களில் நான்குமுனைப் போட்டி கூட இருக்கும். 

இது தவிர சுயேட்சைகளும் களமிறங்குவார்கள். ஆக, தற்போது நடக்கப் போகும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு கடுமையான பலப்பரிட்சையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்