முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மாநில முதல்வர்கள் மாநாடு ஏப்ரல் 15ம் தேதி நடத்த மத்தியஅரசு ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். - 25 - தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டை அடுத்த மாதம் 15 ம் தேதி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு அதன் பிறகு இந்த விஷயத்தில் ஒரு முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதே நேரம் இந்த மையத்தை அமைப்பது பற்றி மத்திய அரசு கடுமையாக வலியுறுத்தும் என்றும் தெரிகிறது. நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மகராஷ்டிரா மாநிலம், ராஜஸ்தான், ஆந்திரா போன்ற பல மாநிலங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக மகராஷ்டிரா மாநிலம் அடிக்கடி தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகிறது. 1993 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 257 பேர் பலியானார்கள். அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து மும்பையில் தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களை தாக்கினார்கள். இவர்களுக்கும், நமது பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. இந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். ஒரே ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். அவன் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். இந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்போது பொதுமக்கள், போலீசார் என கிட்டத்தட்ட 166 பேர் பலியானார்கள். சமீபத்தில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததில் 15 பேர் பலியானார்கள். இதே போல் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இது போன்ற பயங்கரவாத செயல்களை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முயன்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முயன்றது. ஆனால் இதற்கு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காரணம், இது மாநில அரசின் உரிமை மற்றும் அதிகாரங்களை பறிக்கக் கூடியது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதே போல் குஜராத் முதல்வர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற பல முதல்வர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்திய அரசு இந்த முயற்சியை சற்று கிடப்பில் போட்டது. தற்போது தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து ஆலோசிக்க மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த கூட்டத்தை அடுத்த மாதம் 15 ம் தேதி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அவ்வாறு கேட்டறிந்த பிறகு தேசிய பயங்கரவாத தடுப்பு மைய விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு பற்றி டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து மாநில முதல்வர்கள் கொண்டிருக்கும் அச்சத்தை போக்க நாங்கள் முயற்சி செய்வோம். அவ்வாறு அச்சத்தை நீக்கி விட்டு இந்த மையம் அமைப்பதற்கு அவர்களின் சம்மதத்தை பெறுவோம். காரணம், நாட்டின் பாதுகாப்புக்கு இது உடனடி தேவையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்