முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவைக்கு டிசம்பரில் இடைத்தேர்தல் வெங்கய்ய நாயுடு ஆருடம்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத், மார்ச் - 25 - ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களோடு சேர்த்து,டிசம்பரில் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த காங்கிரஸ் விரும்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஹைதராபாதில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நொண்டி வாத்து போல் செயலிழந்து விட்டது. அது இப்போது சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியில் இருந்து அளிக்கும் ஆதரவுடன் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. மக்களிடையே தன் மீது அதிருப்தி வளர்ந்து வருவதையும், பொருளாதார நிலைமை மேம்படப் போவதில்லை என்பதையும் காங்கிரஸ் உணர்ந்துள்ளது. எனவே இழப்புகளைத் தவிர்க்கவும் ஒரளவு பலத்தையாவது தக்க வைத்துக் கொள்ளவும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலோடு டிசம்பரில் மக்களவைக்கு தேர்தலை நடத்த அக்கட்சி விரும்புகிறது. அரசியல் சட்ட அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் பெயர் பெற்றது. இது, மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்ட சில மணி நேரங்களில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஆதரவு விலகலுக்குப் பின் நடத்தப்பட்ட சோதனை என்பது ஒரு மிரட்டலாகும். `இதே கதி தான் உங்களுக்கும் ஏற்படும்' என்று கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலாகும் இது. நாளுக்கு நாள் கெட்ட பெயரைச் சம்பாதித்து வரும் காங்கிரஸூடன் கூட்டணியைத் தொடர்வது தனது வெற்றி வாய்ப்புகளைப் பாதிக்கும் என்பதை தி.மு.க. உணர்ந்து விட்டது. இப்போது, சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் உரிய சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கின்றன. காங்கிரஸூக்கு ஒரு கூட்டணியை நிர்வகிப்பதற்கான திறமை இல்லாத காரணத்தாலும், அக்கட்சி கூட்டணி தர்மத்தைப் பின்பற்றாததாலும் ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன. மக்களவைக்கு முன்கூட்டியே வரவுள்ள தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நிலவரம் சரியில்லை என்பதால் அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது நாட்டுக்கு நல்லது என்பதோடு, நாட்டில் இப்போதுள்ள நிலையற்ற தன்மை முடிவுக்கு வரவும் வழிவகுக்கும் என்றார் வெங்கய்யநாயுடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்