முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

புதன்கிழமை, 27 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.28 - இலங்கையில் போர்க்குற்றம் நடத்தியவர்களுக்கு தண்டனை பெற்று தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவும், தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவும் ஐ.நா.பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலுரைத்து  இலங்கை பிரச்சினை குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசியதாவது:-  

இந்த அரசைப் பொறுத்தவரையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் போரை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறோம். இந்திய அரசு இலங்கைத் தமிழர்களை அழிக்க ஆயுதங்களை அளித்ததிலிருந்து, பயிற்சிகளை அளித்ததிலிருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறோம்.  நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில் அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தேன். ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதைத் தடுத்து நிறுத்தினேன். இந்தியாவில் எங்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று பாரதப் பிரதமரை வலியுறுத்தினேன். இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டேன். இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து, அந்தப் போட்டியை நடத்துவதையே தமிழகம் கைவிட்டுவிட்டது. 

மேலும், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சென்ற ஆண்டு, இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினேன்.  அமெரிக்கா கொண்டு வந்த ஓரளவு வலுவான தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக மத்திய காங்கிரஸ் அரசு வாக்களித்தது.  

இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தபோது, அதற்கு வலுவூட்டும் விதமாக இந்தியா என்னென்ன திருத்தங்களை அளிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். இந்தத் திருத்தங்களை எல்லாம் 19.3.2013 அன்று இறுதி வரைவு தீர்மானம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்து, மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நாடாக இந்திய நாடு விளங்க வழிவகை செய்ய வேண்டும் என்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.  

இது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இந்த ஆண்டு கொண்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதையெல்லாம் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.  

இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க் குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ- மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 100-க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ - மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், மாணவ-மாணவியர் 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 

31 இடங்களில் ரயில் மறியல், 24 இடங்களில் உருவபொம்மையை எரித்தல் ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர். எனது தலைமையிலான அரசால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாரதப் பிரதமரை வலியுறுத்தி நான் எழுதியுள்ள கடிதங்கள் மற்றும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக எனது தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ- மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கை தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. 

இவ்வளவு உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது. போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் அவல நிலைமை நீடிக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகிறது. தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் ஒரு இனவெறி இலங்கையில் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு  சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் கீழ்க்காணும் தீர்மானத்தினை தமிழக அரசின் சார்பில் நான் முன்மொழிகிறேன். 

தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின்  பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்;

இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பேரவை தலைவர் அவர்களே என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, 

இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ்டுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக் கொண்டு, எனது இந்த வேண்டுகோளிற்கு அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டு அமர்கிறேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்