முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் பேச வாய்ப்பு அளித்தும் நழுவிய மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளித்தும் அவர் பேசாமல் வெளிநடப்பு செய்ததன் பேரில் நழுவினர். அவரை தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

சட்டசபையில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், இந்த பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்கள்.

இதன் மீது கட்சிக்கு ஒருவர் வீதம் பேச சபாநாயகர் அழைத்தார். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்திருந்தார்கள்.

தி.மு.க. தரப்பில் கோவி. செழியன் பேசினார். அவர் பேசும்போது, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசாமல் வேறு பிரச்சினையை கிளப்பி பேசினார்.

இதற்கு அமைச்சர்கள் மற்றும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் கோவி. செழியன் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட பிரச்சினை மீது மட்டும் பேசுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். இருந்தபோதிலும் கோவி. செழியன் தொடர்ந்து வேறு பிரச்சினையை கிளப்பி அதன்மீது பேசினார். ஆளுங்கட்சி தலைப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் பேசிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து கோவி. செழியனை பேச சபாநாயகர் அழைத்தார். கோவி. செழியனும் பேசினார் மீண்டும் பழைய பிரச்சினையை பேசினார்.

அண்ணா தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஒரே கூச்சல்-குழப்பம் நிலவியது. இந்த நிலையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து உறுப்பினர் கோவி. செழியன் திரும்ப திரும்ப அதையே பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். தேவையில்லாதவற்றை பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து கோவி. செழியன் பேசிய அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணனை பேச சபாநாயகர் அழைத்தார். அவரும் எழுந்து பேச முற்பட்டார். அவரை பேசவிடாமல் தி.மு.க.வினர் எழுந்து நின்று கூச்சல் எழுப்பி கோவி. செழியனுக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சபாநாயகர் அவரை பேச அனுமதித்தார். மீண்டும் அவர் பழைய கதைக்கே சென்றார். உடனே அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து முதலமைச்சர் அம்மா கருணையுடன் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் பழைய கதைக்கே செல்கிறார். எனவே வேறு உறுப்பினரை பேச சபாநாயகர் அழைக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் எழுந்து நின்று பேச வாய்ப்பு கேட்டு கொண்டிருந்தார்கள். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறிய சபாநாயகர் அனைவரும் இது போன்று எழுந்து நின்று பேசுவது முறையல்ல. உட்காருங்கள் என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆவேசமாக எழுந்து சபாநாயகரை பார்த்து கையை நீட்டி நீட்டி பேசிக் கொண்டிருந்தார். அவரை சபாநாயகர் எச்சரித்தார்.

தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி கொண்டிருந்தார்கள்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்கள் இருக்கையை விட்டு முன் வரிசைக்கு சபாநாயகர் அருகே வந்தார்கள். அங்கேயும் அன்பழகன் சபாநாயகரை பார்த்து கையை நீட்டி நீட்டி ஆவேசமாக பேசினார். அனைவரும் அவரவர் இடத்தில் போய் அமருங்கள் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை உறுப்பினர் மு.க. ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். எனவே இதன் மீது அவர் பேசலாம் என்று சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து கோவி. செழியனை பேச அனுமதிக்குமாறு கேட்டார்.

உடனே இதற்கு சபாநாயகர் கோவி. செழியனுக்கு கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. எனவே நீங்கள் பேசுங்கள் என்று கூறினார்.

தொடர்ந்து கோவி. செழியன் தான் பேச வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி கொண்டிருந்தார். சபாநாயகர், நீங்கள் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஸ்டாலின் பேசுவதற்கு தயாராக இல்லை.

இந்த நிலையில் ஸ்டாலின் எழுந்து உறுப்பினர் கோவி. செழியன் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கினீர்கள். இந்த நிலையில் தொடர்ந்து என்னை பேச அழைத்தீர்கள். நன்றி. ஒரு உறுப்பினருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு என்னை பேச அழைப்பது சரியல்ல. நான் பேசுவது மரபு அல்ல என கூறி சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்