இறந்த தாயுடன் 5 நாள் வசித்த 4 வயது சிறுவன்!

வியாழக்கிழமை, 28 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

நியூஜெர்சி, மார்ச். 29 - இறந்த தாயுடன் நான்கு வயது சிறுவன் ஒருவன் 5 நாட்கள் தன்னந்தனியாக வாழ்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நியூஜெர்சியில் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரில் இருந்து 7 மைல் தொலைவில் ஒரு டவுன்ஷிப் உள்ளது. அந்தப் பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பின் பராமரிப்பாளர் நேற்று முன்தினம் காலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர், பாதி திறந்திருந்த நிலையில் உள்ள அந்த வீட்டின் கதவை உடைத்துத் திறந்தனர். உள்ளே நான்கு வயதுடைய சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் இருந்த நிலை, உணவில்லாமல் அவன் 5 அல்லது 6 நாட்களாக அங்கே இருந்திருக்கவேண்டும் என்பதை காவல்துறையினருக்கு உணர்த்தியது.
மேலும், படுக்கை அறையில் ஒரு பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கிடந்ததையும் அவர்கள் கண்டனர். இறந்து கிடந்தது சிறுவனுடைய தாயாக இருக்கலாம் என்று கருதிய போலீசார், பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை மரணம் என்று முடிவு வந்ததாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இறந்த பெண்ணின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: