பாகிஸ்தான் முன்னாள்அதிபர் பர்வேஸ் முஷாரப்மீது நீதிமன்ற வளாகத்தில் ஷூவீச்சு

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

கராச்சி: மார்ச் - 30 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ முஷாரப் மீது சிந்து மாகாண நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் ஷூவை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப் கடந்த 4 ஆண்டுகாலமாக வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தார். கடந்த 24-ந் தேதி துபையில் இருந்து கராச்சி வந்து சேர்ந்தார். .மே மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்காக தாம் நாடு திரும்பியிருப்பதாக தெரிவித்தார். அவர் நாடு திரும்பினால் கொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் விடுத்த எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் வந்து சேர்ந்தார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு ஒன்றில் சிந்து மாகாண நீதிமன்றம் கொடுத்திருந்த முன் ஜாமீனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்காக இன்று முஷாரப் சிந்து மாகாண நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்கு வருகை தந்த முஷாரப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது மர்ம நபர் ஒருவர் முஷாரப்பை நோக்கி ஷூ ஒன்றை வீசி எறிந்தார். ஆனால் அந்த ஷூ அவர் மீது படவில்லை. இந்த களேபரத்துக்கு மத்தியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் முஷாரப். அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட முன் ஜாமீன் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: