இந்தியாவை விட்டு செல்ல இத்தாலி தூதருக்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 3 - கேரள கடற்பரப்பில் 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேற விதித்த தடையை சுப்ரீம் கோர்ட்  விலக்கிக் கொண்டு அவர் இந்தியாவை விட்டு செல்ல அனுமதி அளித்துள்ளது. 

மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி மாலுமிகள் இருவர் தேர்தலில் வாக்களிக்க சொந்த நாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியுடன் சென்றனர். ஆனால் இருவரையும் திருப்பி அனுப்ப இத்தாலி அரசு முதலில் மறுத்தது. இதனால் இந்தியா- இத்தாலி இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்த வழக்கில் இத்தாலி மாலுமிகளுக்கு அனுமதி கொடுத்த சுப்ரீம் கோர்ட்டோ, இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் டேனிலி மான்சினி இந்தியாவை விட்டு செல்ல தடை விதித்தது. மேலும் அவர் இந்தியாவை விட்டு செல்லாத வகையில் கண்காணிப்பும் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் வேறுவழியின்றி இந்தியாவுக்கு இரு மாலுமிகளையும் இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. இதனிடையே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இத்தாலி கடற்படை வீரர்கள் திரும்பியதை தொடர்ந்து இத்தாலி தூதரின் தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கி கொண்டது. இந்தியாவை விட்டு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைவில் நடத்தவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 16 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: