ஸ்டெர்லைட் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.3 - தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் கம்பெனி ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட மறுத்துவிட்டது. துறைமுக நகரான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  தாமிர உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும்போது நச்சுவாயு வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் கண் எரிச்சல், குமட்டல், வயிறுவழி, கண்வழி ஆகியவைகளால் பெரும் கஷ்டப்பட்டனர். அதனால் இந்த ஆலையை மூட வேண்டும் என்று ம.தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் ஆதரவு கொடுத்து வந்தனர். இதனையொட்டி ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் சுற்றுப்பறங்களையும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விஷவாயு கசிவு ஏற்பட்டிருப்பதும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையொட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு ஸ்டெர்லைட்  தொழிற்சாலையை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதிகளில் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஸ்டெர்லைட் தொழிற்சாலை ரூ.100 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேலும் கூறுகையில் சர்வதேச கம்பெனியான இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து விஷவாயு, துகள்களும் நீண்டகாலமாக வெளியேறி அந்த பகுதி முழுவதும் சுற்றுப்புறசூழல் மாசு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த கம்பெனி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் கடந்த 2010-ம் ஆண்டு இந்த ஆலையை மூட சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. ரூ.100 கோடிக்கும் குறைவாக நஷ்டஈடு வழங்கினால் விரும்பும் விளைவு எதுவும் ஏற்படாது. அதனால் ரூ.100 கோடி நஷ்டஈட்டை 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று நீதிபதி பட்நாயக் உத்தரவிட்டார். அதேசமயத்தில் இந்த உத்தரவானது கடந்த மார்ச் 30-ம் தேதி அன்று ஸ்டெர்லைட் கம்பெனியை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவை கட்டுப்படுத்தாது. இந்த உத்தரவு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மட்டுமே கட்டுப்படுத்தும் என்றும் வழக்கறிஞர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: