முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா சாம்ராஜ்யத்தின் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புட்டபர்த்தி,ஏப்.26 - பகவான் சத்ய சாய்பாபாவின் அருள் சாம்ராஜ்யத்தை சேர்ந்த பக்தர்களின் நன்கொடையில் உருவாகி ஆலமரமாக நிற்கும் ஸ்ரீசத்ய சாய் மைய அறக்கட்டளை அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. ஒன்றரை லட்சம் கோடி வரை இருக்கும் என்று கூறுகின்றனர். 165 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட நேரடி பக்தர்கள் பாபாவுக்கு இருக்கிறார்கள். அவர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.  

இந்த நிலையில் பாபாவுக்கு பிறகு இந்த அறக்கட்டளைக்கு அடுத்த தலைவர் யார் என்பதை அறிவதில் பாபாவின் ஆசிரமத்தை சேர்ந்தவர்களும், தொண்டர்களும் மட்டுமல்ல, மாநில அரசுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. முதலாவதாக, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், பாபாவின் நேரடி தொண்டருமான வி.என். பகவதி அடுத்த தலைவராக வரக் கூடும் என்று கருதப்படுகிறது. இதற்கடுத்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் தலைவராக பதவி வகித்து ஓய்வு பெற்றவரான எஸ்.வி. கிரியின் பெயர் அடிபடுகிறது. தமிழகத்தை சேர்ந்த டி.வி.எஸ். தொழில் குடும்பத்தை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசனும் அறக்கட்டளை உறுப்பினராக இருக்கிறார். பாபாவின் குறிப்பை உணர்ந்து செயலாற்றியவர் இவர். ஆனால் பெரும்பாலும் அடுத்த தலைமை ஏற்கக் கூடியவர் என்று அடையாளம் காட்டப்படுபவர் ஏ. சக்ரவர்த்தி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது நிர்வாக திறமையை கண்ட பாபா, வேலையை உதறி விட்டு தன்னிடம் வந்து சேர்ந்து விடுமாறு உத்தரவிட்டார். அதனை ஏற்றுக் கொண்டு அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு பாபாவிடம் சேர்ந்தார். இவர் 1994 ல் அறக்கட்டளை செயலாளரானார். 

ரத்த உறவு சம்பந்தமாக உள்ள பாபாவின் தம்பி ஜானகிராமின் மகன் ஆர்.ஜே. ரத்னாகர் பெயரும் இந்த வரிசையில் இடம் பெறுகிறது. இளம் வயதுடைய சத்யஜித்(33) பாபாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவருடைய அனுமதி இல்லாமல் பிரசாந்த் நிலையத்திற்குள் நுழைய முடியாது என்று கூறுகின்றனர். இவர்களில் யார் அடுத்த தலைவர் ஆவார் என்ற விவாதம் நடக்கிறது. பாபாவின் தம்பி ஜானகிராம் இருந்த வரை ஊருக்குள் எல்லோரும் நேரில் பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தார். யார் வீட்டில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சென்று பார்ப்பார். எனவே அவரது மகனான ஆர்.ஜே. ரத்னாகர் என்பவருக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு உள்ளது. 

இந்த நிலையில் அறக்கட்டளைக்கு உள்ள ஏராளமான சொத்துக்களை இந்து அறநிலையத் துறையே எடுத்துக் கொண்டு விடுமோ என்ற அச்சமும் சாய்பாபா அறக்கட்டளையினரிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆந்திர அரசுக்கு அத்தகைய எண்ணம் ஏதுமில்லை என்று மாநில வருவாய்த் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். அவர் அப்படி கூறியிருந்தாலும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் போனால் அறக்கட்டளையின் சொத்துக்கள் அரசின் வசம் சென்று விடும் என்றே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்