முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இக்பால்சிங்கிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுச்சேரி, ஏப்.26 -  புதுவை கவர்னர் இக்பால்சிங்கிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். குதிரை பண்ணை அதிபர் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் இக்பால்சிங் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி கேட்டனர். 

இதற்கு பிரதமர் அலுவலகம் கவர்னரிடம் விசாரணை செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் புதுவை கவர்னர் இக்பால்சிங்கிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. இதன் பின்னர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீண்டும் 25-ந் தேதி புதுவை வந்து விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்பட்டது. 

அதன்படி கவர்னரிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு இணை இயக்குனர் தலைமையில் 6 அதிகாரிகள் மும்பையில் இருந்து நேற்று புதுவை வந்தனர். விமானம் மூலம் சென்னை வந்த அதிகாரிகள் அங்கிருந்து கார் மூலம் புதுவைக்கு மதியம் 1.30 மணிக்கு வந்தனர். ராஜ்நிவாசிற்கு வந்த அவர்கள் கவர்னரிடம் விசாரணை நடத்தினர். 

கவர்னரிடம் நடந்த விசாரணையை அதிகாரிகள் வீடியோவிலும் பதிவு செய்தனர். 

கவர்னரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதை முன்னிட்டு கவர்னர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாளிகையை சுற்றிலும் பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரத்தில் கவர்னர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வந்தனர். 

இதற்கிடையே புதுவை கவர்னர் மீது மேலும் 2 புதிய புகார்கள் எழுந்துள்ளது. தனது மகன்களை உறுப்பினராக கொண்ட சவுத் எஜூகேஷனல் டிரஸ்ட்டு என்ற அமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கினார் என்றும், மேலும் புதுவை மாநிலத்தில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள சீக்கிய சமூதாயத்திற்கு குருத்வாரா கட்ட நிலம் ஒதுக்கியதாகவும் புகார் கூறப்பட்டது. 

மருத்துவக்கல்லூரி விவகாரத்தை கவர்னரின் தனிச்செயலாளர், தலைமை செயலாளர், சவுத் எஜூகேஷனல் டிரஸ்டின் தலைவர் ஆகியோர் மறுத்துள்ளனர். டிரஸ்டில் இருந்து கவர்னரின் மகன்கள் விலகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல குருத்வாரா கட்ட நிலம் ஒதுக்கியது அமைச்சரவை ஒப்புலுடன் நடந்ததாக கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். அதோடு கவர்னர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர் பதவி விலக தேவையில்லை என்றும் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் கந்தசாமி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கவர்னர் இக்பால்சிங் பதவி விலக கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற 27-ந் தேதி புதுவை மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம்  நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்