முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்: கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் - சி.பி.ஐ.

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.26 - தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்பார்த்தபடி குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை. ராசா லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு  தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த இழப்பிற்கு தி.மு.க.வை சேர்ந்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆண்டி முத்து ராசாவே முழுப்பொறுப்பு என்றும் தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கை பத்திரிகைகளில் வெளி வந்தபோது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உலகிலேயே நடந்த மிகப்பெரிய இமாலய ஊழல் இதுதான் என்று  அமெரிக்க பத்திரிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்த ஊழல் சர்வதேச அளவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் ஆ.ராசா தனது  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அடுத்து அவரது வீடுகளிலும் அவரது உதவியாளர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு  கிடைத்தது. 

மேலும் இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள்  தொடரப்பட்டன.

இந்த ஊழல் வழக்கை தங்களது கண்காணிப்பில் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட்டு கட்டளையிட்டது.

இதை அடுத்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒரு நாள் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அடுத்து அவரது உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆ.ராசாவும் இரு உதவியாளர்களும் பின்னர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சி.பி.ஐ.காவலில் எடுக்கப்பட்டனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததை அடுத்து இவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இப்போதும் திகார் சிறையில்தான் உள்ளனர்.

இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு கம்பெனிக்கு கிடைத்த ஊழல் பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக செய்திகள் வெளியாயின.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் குறைந்த ஏலத்திற்கு 2ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி தனது துணை நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடியை  கொடுத்ததாக செய்திகள் வெளியாயின.

ஆனால் இந்த ரூ. 214 கோடியை அதே கம்பெனியிடம் தாங்கள் திருப்பி கொடுத்துவிட்டதாக கலைஞர் டி.வி. நிர்வாகம் கூறினாலும் கூட கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடியை அளித்தது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிர்வாக தலைவர் பல்வாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

இதை அடுத்து சி.பி.ஐ. காவலில் சிறிது நாட்கள் இருந்த பல்வாவும் பிறகு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின்படி அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில்  2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 80,000 பக்கங்களை கொண்ட முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று இரண்டாவது  ( துணை ) குற்றப்பத்திரிகை நேற்று இதே நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யில் 20 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஊழலுக்கு உடந்தையாக சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு  செய்யப்பட்டுள்ளது. அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று இந்த துணை குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் கருணாநிதியின் மனைவியும் கலைஞர்  டி.வி.யில் 60 சதவீத பங்குளை வைத்திருப்பவருமான தயாளு அம்மாள் பெயர் இந்த  குற்றப்பத்திரிகையில் எதிர்பார்த்தபடி இடம் பெறவில்லை.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும் கனிமொழிக்கு 20 சதவீதமும், அதன் நிர்வாக இயக்குனர் சரத் குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன.

ஆ.ராசா மீது லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.200 கோடி ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வாவின் பங்குதாரர் நிறுவனம் ஒன்றின் மூலமாக கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது என்பதை ஏற்கனவே சி.பி.ஐ, கோர்ட்டில் சி.பி. ஐ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குசேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்   மற்றும்  சினியுக் பிலிம்ஸ்  பிரைவேட் லிமிடெட் மூலமாக இந்த  பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றதாகவும் சிபிஐ. தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இபிகோ. ( இந்திய தண்டனைச் சட்டம் ) 120 பி. ( கிரிமினல் சதித்திட்டம் ) இபிகோ. 468 ( போலி மற்றும் மோசடி )  இ.பி.கோ. 471 ( உண்மையான ஆவணம்  போல போலி ஆவணங்களையும் எலக்ட்ரானிக் பதிவுகளையும் பயன்படுத்துதல் ) இபிகோ. 420 ( மோசடி  மற்றும் ஏமாற்றுதல் , கண்ணியமற்ற முறையில் சொத்துக்களை அனுமதித்தல் ) இபிகோ. 109 ( உடந்தையாக இருத்தல் ) ஆகிய பிரிவுகளின் கீழ்  குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில்  தாக்கல்  செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா  மற்றும் 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அவர்களின் பெயர்கள்  வருமாறு 

முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலை தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா,  ராசாவின் முன்னாள் தனிசெயலாளர் ஆர்.கே. சந்தோலியா,  ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகீத் உஸ்மான் பல்வா, யுனிடெக் ஒயர்லெஸ்  நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா,  மும்பையை சேர்ந்த டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் தொலை தொடர்பு குழும நிர்வாக இயக்குனர் கவுதம் தோஷி,  இதே ரிலையன்ஸ் கம்பெனியின் இரு துணை தலைவர்களான ஹரி நாயர்,  சுரேந்திர பிப்பாரா, கனிமொழி  ஆகியோர் உள்பட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்கு எடிசலாட் டி.பி. டெலிகாம் நிறுவனமும்  யுனிடெக் நிறுவனமும் தகுதியற்ற நிறுவனங்களாக இருந்தன. ஆனால் இந்த நிறுவனங்களை தகுதியுள்ளவைகளாக மாற்றுவதற்காக ராசா விதிமுறைகளையே திருத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருக்கும் விதிமுறைகளுக்கு  பதிலாக  ராசா முன்னுரிமை பட்டியலை  திருத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி கம்பெனி தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஒரு ஊழல் வழக்கில் நாட்டின் உயர் மட்ட   சட்ட அதிகாரியாக இருக்கும் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு ஆஜராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா யுனிடெக்  மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான தேதியை முன் கூட்டியே  ராசா தன்னிச்சையாக முடிவு  செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி லைசென்ஸ் வழங்கும்  விஷயத்தில்  பிரதமரின் அலுவலகம் , சட்ட அமைச்சகம், தொலை தொடர்பு  ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றின் ஆலோசனைகளையும் ராசா புறக்கணித்து விட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இதுவரை ஆ.ராசா, பெகுரா, சந்தோலியா, பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. இதுவரை கைதாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago