முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 15 முதல் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியம்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். 7 - அரசின் மானிய திட்ட பலன்கள், பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், நேரடி பணபரிமாற்ற திட்டம், வரும் ஜூலை முதல் மேலும் 78 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று தேசிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தேர்தல் நெருங்குவதை ஒட்டி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு திட்டங்களின் மூலம் மக்களைக் கவர பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களையும், ஓய்வூதிய திட்டங்களையும், மானிய உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கான பணம், தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கே நேரடியாக நல திட்ட பணத்தையும், மானியத்தையும் வழங்குவதற்காக, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் முத்திரை காங்கிரசின் 'கை சின்ன முத்திரை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த திட்டம் குறித்த தேசிய கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. இதில், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உட்பட, இதில் தொடர்புடைய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த திட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆதார் அடையாள அட்டை அடிப்படையில், செயல்படுத்தப்படும் இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் பரவலாக்கப்படும். முதல் கட்டமாக, 43 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூலை 1 ம் தேதி முதல் 78 மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 

இதில், ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., உத்தரகண்ட், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின், குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், சமையல் கியாஸ் மானிய தொகையையும் பயனாளிகளுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. வரும் மே மாதம் 15 ம் தேதிக்குள், குறிப்பிட்ட 20 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அங்கு பயனாளிகள் சமையல் கியாஸ் மானிய தொகையை வங்கி கணக்கு மூலம் பெறலாம். இதற்காக, சமையல் காஸ் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 

வங்கிகள் மட்டுமல்லாது, மானிய தொகை, தபால் அலுவலக கணக்குகளில் வரவு வைக்கும் வகையில், அக்டோபர் மாதம் 1 ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். பயனாளிகளின் வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்களை, முழுமையாக மின்னணு முறையில் மாற்றுவதற்கும், அனைவருக்கும், ஆதார் அடையாள அட்டை கிடைப்பதற்கும் தேவையான முயற்சிகள், இரட்டிப்பு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும். ஆதார் அட்டை வழங்கும் பணி விரிவடையும்போது, இத்திட்டத்தை அமல்படுத்தும் மாவட்டங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக விரிவடையும். 

ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கிடைக்கும். அவர்கள் மானிய தொகையை பெற ஆரம்பித்தவுடனே, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு சந்தை விலையை கொடுக்க வேண்டி இருக்கும். அதாவது, ஒரு சிலிண்டருக்கு ரூ. 901.50 கொடுக்க வேண்டும். இதன்மூலம், போலி இணைப்புகள் ஒழிக்கப்படுவதுடன், சிலிண்டர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும். இத்தகவல்கள், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இத்திட்டத்தை தொடங்கிய போது எதிர்பார்த்திராத பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளோம். எனவே, திட்டத்தை அமல்படுத்துவதற்கான நமது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். அதுபோல், யாரும் விடுபடாமல் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை கிடைக்க செய்ய வேண்டும். ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு, கேட்டவுடன் வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். வங்கி கணக்கு தொடங்குவது, வங்கிகளின் எதிர்காலத்துக்கும் நல்லதாக அமையும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்