முக்கிய செய்திகள்

கனிமொழி மீது நடவடிக்கை - மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஊழல்
Ramakrishnan 5

 

சென்னை, ஏப்.27 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணை முடியும் வரை கலைஞர் டி.வி.யின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா நவம்பர் 2010​இல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. 

இந்த  ஊழலை விசாரித்து வரும் மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) தாக்கல் செய்த முதலாவது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, 2ஜி ஒதுக்கீட்டில் பயனடைந்த ஸ்வான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சி ரூ.214 கோடி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தமிழக முதலமைச்சர்  மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவில் நாட்டிற்கு  இழப்பை ஏற்படுத்தியுள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள ஆ. ராசா உள்ளிட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்று, தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 5 பேர் மீதும்  பாரபட்சமற்ற முறையில் குற்றவியல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசையும், மத்திய புலனாய்வுக்கழகத்தையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், அலைக்கற்றை ஊழல் பணத்தை முறைகேடாக பெற்று மூலதனமாக்கி செயல்பட்ட கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாட்டை nullநீதிமன்ற விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: