முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.27 - மேற்குவங்காளத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இன்று 3-வது கட்டமாக 75 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 75 தொகுதிகளில் போட்டியிடும் 485 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழகம், புதுவை, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களோடு மேற்குவங்காளத்திலும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேற்குவங்கத்தை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தமிழகம், கேரளம், புதுவையில் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்குவங்காளத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. முதல் கட்டமாக 54 தொகுதிகளிலும் இரண்டாவது கட்டமாக 50 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இதற்கிடையில் இன்று 3-வது கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் கொல்கத்தா, மற்றும் 24 பர்க்கானா வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள 75 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த 75 தொகுதிகளிலும் சுயேட்சைகள் உள்பட 485 பேர் போட்டியிடுகின்றனர்.  இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ்- திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 3-வது கட்ட தேர்தலில் பல முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகிறார்கள். அதனால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணி சார்பாக முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, நிதி அமைச்சர் ஆசிம் தாஸ்குப்தா ஆகியோர் முறையே 6-வது தடவையாக  ஜதாவ்பூர், ஹர்தஹா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அமைச்சர்கள் கவுதம் தேவ், அப்துர் ரெஜாக் முல்லா, காந்தி கங்குலி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பார்த சாட்டர்ஜி, கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் முறையே பெஹலா மேற்கு மற்றும் ஹெகலா கிழக்கு ஆகிய தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார்கள். இந்த 75 தொகுதிகளிலும் இடதுசாரி கூட்டணிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த 75 தொகுதிகளிலும் 17 ஆயிரத்து 792 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 75 ஆயிரம் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு,ரவி சங்கர் பிரசாத், மற்றும் இடதுசாரி கூட்டணி தலைவர்கள் ஏ.பி.பரதன், சோமநாத் சாட்டர்ஜி,பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், பீமன் போஸ், முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி ஆகிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்